அதிமுக செயற்குழு ரத்து: பின்னணி என்ன தெரியுமா?
பைல் படம்.
இதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. கட்சிக்கு புதியவர்களை அதிகளவில் அழைத்து வர வேண்டும், கட்சியிலிருந்து விலகி நிற்பவர்களை மீண்டும் கட்சிக்குள் அழைத்து வருதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “ஒரு சில காரணங்களால் 7.4.2023 - வெள்ளிக் கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகத்துக்கு நெருக்கமானவர் ஒருவரிடம் விசாரித்தோம். அப்போது இதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். “அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் இருந்தே ஒரு சென்டிமெண்ட் இருக்கிறது. செயற்குழு அறிவிப்பை முதலில் வெளியிட்டு பின்னர் ரத்து செய்வோம். அதன் பின்னர் தான் அதிகாரப்பூர்வ தேதியை வெளியிடுவோம். தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக செயற்குழு நடைபெற உள்ளது. பழைய செண்டிமென்ட் படியே 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை 8ம் தேதி பௌர்ணமி. அதன் பின்னர் தேய்பிறை. எனவே அடுத்த வளர்பிறையில் தான் செயற்குழு கூட்டம் நடைபெறும். இந்த மாத இறுதிக்குள் செயற்குழு கூட்டம் கூட்டப்படும்” என்று அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu