முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட கேரளாவிற்கு பதிலடி
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கை முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதுாறான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை கேரள பத்திரிகை தனது பதிப்பில் வெளியிட்டு தன் வன்மத்தை கொட்டி உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் ஐ.நா.,சபை அறிக்கையின் அடிப்படையில் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போர் 1919 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த உட்ரோ வில்சனின் 14 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாக உருவெடுத்து இருந்த அமைதி சங்கம் தான், இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பின்னர் அதாவது 1945 ஆம் ஆண்டு ஐ.நா மன்றமாக உருவெடுத்தது.
அந்த 1945 க்கு பின்னர் உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களும், அண்டை நாடுகளுடன் போர்களுமாக பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்தும் ஐ.நா மன்றத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.
18 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த ஈரான்- ஈராக் யுத்தம், ஈராக்கை தொடர்ந்து அழித்துக் கொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் நடத்திய யுத்தம், 1945 லிருந்து 1989 வரை நீடித்த ரஷ்ய- அமெரிக்க பனிப்போர், 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த அமெரிக்க- கியூபா பனிப்போர், அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த அரபு வசந்தம் எனும் பெயரில் நடந்த உள்நாட்டு கலவரங்கள், 1962 இந்திய- சீன போர், திபெத்தை தன் வசமாக்கி தைவானை தன்னுடைய நாடு என்று மிரட்டிக் கொண்டிருக்கும் சீனாவின் தொடர் அச்சுறுத்தல் நடவடிக்கைகள், வடகொரிய அதிபரான கிம் ஜோங் இன் அடாவடித்தனங்கள், 3 முறை நடந்த இந்திய பாகிஸ்தான் போர்கள் என எதிலுமே தன்னுடைய ஆளுமையை செலுத்த முடியாத ஒரு சங்கம் தான் ஐக்கியநாடுகள் சபை. இது இந்த உலகத்திற்கு ஒரு சாபக்கேடு.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு இந்த ஐ.நா சபையால் ஒரு துரும்பை கூட கிள்ளி போட முடியாத போது எனவே ஐ.நா., சபை எங்களை பொறுத்தவரை ஒரு சோம்பேறி மடம் என்று அப்போதே நாங்கள் சொல்லி விட்டோம். அதனால் இந்த நியூயார்க் டைம்ஸ் அல்ல எந்த நியூயார்க் டைம்ஸ் முல்லைப்பெரியாறு அணையை குறித்து அவதூறாக பேசினாலும் அதற்கு எதிராக தகுந்த பதிலடியை கொடுப்போம். முல்லைப் பெரியாறு அணையை கட்டியது கர்னல் பென்னிகுயிக் என்கிற ஒரு கடவுள்.
அவர் பெரியாறு அணையினை இன்று வரை பாதுகாத்து வருகிறார். அணை பலமாக உள்ளது என்பதை இந்திய தொழில்நுட்பத்துறை பலமுறை ஆய்வு செய்து நிரூபித்து சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து, அணையில் 142 அடி நீர் தேக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலரின் தூண்டுதல் காரணமாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வேண்டுமென்றே அவதுாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கடும் பதிலடி தரும்.
இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu