தேனி ஆட்டோ டிரைவர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடித்தது எப்படி?
மாதிரி படம்
தேனி நகர் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் தினமும் சில நுாறு ரூபாய்கள் சம்பாதிப்பதே குதிரைக்கொம்பு என்ற நிலை தான் ஆட்டோ டிரைவர்களுக்கு இருந்து வந்தது.
இதற்கிடையில் அழையா விருந்தாளியாக கொரோனாவும் வந்து சேர இரண்டு ஆண்டுகளாக தேனி மற்றும் தேனி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் பொருளாதார ரீதியாக நொறுங்கிப்போய் கிடந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அவர்களுக்கு பலத்த அடி கொடுத்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக தேனி மற்றும் மாவட்டம் முழுவதும் நகர் பகுதி, கிராம பகுதி பாகுபாடு இன்றி எங்கு பார்த்தாலும் கோயி்ல் திருவிழாக்கள் நடந்து வருகிறது. கோயிலுக்கு செல்பவர்கள், கோயில் விழாவிற்காக உறவினர் வீட்டிற்கு வருபவர்கள் என மக்கள் ஆட்டோக்களை நாடினர். இதனால் பலத்த அடி வாங்கிய ஆட்டோ தொழில் தலைநிமிர தொடங்கியது.
இந்நிலையில் கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா தொடங்கியது. இந்த விழா கொடி மரம் நட்டதில் இருந்து விழா நிறைவு பெற ஒரு மாதம் ஆகி விடும். கொடி மரம் நட்டது முதல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவி்ல் செல்ல தொடங்கி உள்ளனர்.
இப்படி செல்லும் பக்தர்கள் தேனியில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு செல்ல ஆட்டோவை தேடுகின்றனர். தவிர சுற்றுக்கிராமங்களில் இருந்தும் ஆட்டோவிலேயே கோயிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் ஆட்டோ தொழில் இதுவரை இல்லாத எழுச்சி பெற்றுள்ளது.
குறைந்தது ஒரு ஆட்டோ டிரைவர் தினமும் இரண்டாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 3 ஆயிரம் ரூபாய் வரை கூட வருவாய் ஈட்டுகின்றனர். நாளை மறுநாள் மே 10ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் கோயிலின் முக்கிய விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த முக்கிய நிகழ்ச்சிகள் ஏழு நாட்கள் நடைபெறும். இந்த ஏழு நாட்களும் வழக்கத்தை விட இரு மடங்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என தெரிகிறது.
தினமும் ஒரு லட்சத்திற்கும் குறையாத (அதிகபட்சம் 2 லட்சம்) எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதர போக்குவரத்துகள் இருந்தாலும் ஆட்டோக்கள் இரவு பகலாக இயங்கும். இந்த சீசனில் இரண்டு ஆண்டு இழப்பினை ஈடுகட்டி விடுவோம் என ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu