அதிமுக தலைவர்களே ஒன்று சேருங்கள்...! ஜெ உதவியாளர் பகிரங்க அறிக்கை...
ஜெ.,உடன் பூங்குன்றன் பைல் படம்.
அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஜெ.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்பது எனது பேராசை. அதிமுக-வை பாதுகாப்பதற்கு ஜெயலலிதா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை அருகில் இருந்து பார்த்தவன் நான். அதிமுக-வின் தலைவர்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் தன்னை வருத்திக் கொண்டு, தனி ஒரு ஆளாக அரசியல் களத்தில் எதிரிகளோடு போராடியவர்.
வெற்றிக்காக ஜெ., பட்ட அவமானங்கள், வேதனைகள், சோதனைகள் ஏராளம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பெண்களை விமர்சிக்கத்தான் தெரியும். ஆண் சமுதாயத்தை அரசியல் களத்தில் ஒரு பெண் எதிர்ப்பது என்பது கடினமான ஒன்று. அப்படி பெண்கள் எதிர்த்து நின்றால், ஆண் சமுதாயம் தரும் பரிசு தரக்குறைவான விமர்சனம் தான். அப்படி வந்த பேச்சுகளையும், ஏச்சுகளையும் தாங்கிக்கொண்டு புகழ் உச்சியில் நிலைபெற்று நின்றார் என்றால் ஜெ.,வை நாம் வணங்குவதும் இரும்பு பெண்மணி என்று போற்றுவதும் கடமை. புரட்சித்தலைவர் என்னும் தீர்க்கதரிசியால் தொடங்கப்பட்டு, புரட்சித்தலைவி என்னும் தாயால் வளர்க்கப்பட்ட இந்த மாபெரும் இயக்கம் ஒருபோதும் தேயாது என்பதை நிரூபிக்க வேண்டிய காலகட்டம் இது.
அரசியல் பார்வையாளர்களை சந்திக்கும் போது சில ரகசியங்கள் காதில் விழுந்தன. அன்றே 'முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்களும் உங்களுக்கு முக்கியம். எனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சில இடங்களை ஒதுக்கிக் கொடுங்கள். முடியாது என்று சொன்ன பிறகு, சில மாற்று ஏற்பாடுகளையாவது செய்யுங்கள்' என்று 'இன்றைய அரசியல் சாணக்கியர்' என்று போற்றப்படும் அமித் ஷாவே சொல்லி இருக்கிறார்.
சாணக்கியர் சொன்ன பிறகும் கேட்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம். ஆட்சி செய்ய வேண்டிய நீங்கள் இன்று வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள். இதையெல்லாம் பார்க்கும் போது மனம் கலங்கித்தான் நிற்கிறது. இது, முதலமைச்சர் பதவி கிடைத்து விட்டால் மற்றவர்கள் எல்லாம் நமக்கு கீழ்தான் என்று கணிக்கத் தவறியதன் விளைவே.
மெகா கூட்டணியை நீங்கள் அமைக்க விரும்பினால் தயங்காமல் அனைவரையும் அரவணைக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற எண்ணம் எழுந்தால் தான் அது சாத்தியமாகும். கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளும் அதைத்தான் விரும்புவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் வலிமையான கூட்டணி அமைய வேண்டும் என்றால் பிரிந்திருக்கும் தலைவர்கள் இணைய வேண்டும். நீங்கள் இணைந்தால் தான் தொண்டர்களுக்கு உற்சாகம் வரும். அவர்களின் உற்சாகமே உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
தென்பகுதி ஓட்டுகளும் அதிமுக-விற்கு முழுமையாக கிடைத்து விடும் என்ற நிலை வந்தாலே மெகா கூட்டணி தானாக அமைந்து விடும். தென் பகுதி ஓட்டுகள் கிடைக்க வேண்டுமென்றால் கழகம் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதில் எடப்பாடியார் முடிவைப் பொறுத்தே இயக்கத்தின் இதயம் செயல்படப் போகிறது. பிரிந்த தலைவர்களை எல்லாம் இணைக்கப் போகிறாரா? சின்னம்மா அவர்களுடன் சேர்ந்து பயணிக்கப் விரும்புகிறாரா? கட்சி என்ற முறையில் அமமுக-வோடு கூட்டணி வைக்கப் போகிறாரா? எது எப்படியோ, அவரின் முடிவு கழகத்தை காக்க எடுக்கப்படும் முடிவாக இருக்க வேண்டும் என்பதே என் அவா.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை எல்லோரும் இணைந்து இருப்பதே பலம் என்று கருதும். காரணம் அவர்கள் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு பயணிக்கிறார்கள். தமிழகத்தில் வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் தான், 'நம்மில் யார் வலியவர்' என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வெற்றியை நோக்கி உங்களது கவனத்தை திருப்ப வேண்டும்.
இவர்களாக இணையப் போகிறார்களா? இல்லை இவர்களையெல்லாம் இணைத்து பாரதிய ஜனதா கட்சி ஒரு மெகா கூட்டணியை உருவாக்கப் போகிறதா? அரசியலில், இரவில் எடுக்கப்பட்ட முடிவு அதிகாலையில் மாறிப்போயிருக்கும் என்பது நான் கண்ட உண்மை. எனவே கழகத்திற்கு நல்லதொரு எதிர்காலம் அமைய இறைவனிடம் பிரார்த்திப்போம். தலைவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் "பிரிந்தவர்கள் எல்லாம் இணைந்து, அம்மா இருந்த போது இயங்கிய இயக்கமாக மாறுவதே எதிர்காலத்திற்கு நல்லது" என்பது அடிமட்டத் தொண்டர்களின் கருத்து என்பது எனக்கு நன்றாகவே தெரியும்... இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu