கம்பம், பெரியகுளத்தில் அசத்தல் உணவாக மாறி வரும் அடை வடை, தட்டு வடை

கம்பம், பெரியகுளத்தில் அசத்தல் உணவாக மாறி வரும் அடை வடை, தட்டு வடை
X
Thattu Vadai Set -தேனி மாவட்டம் கம்பம் பெரிய குளத்தில் அடை வடை, தட்டு வடை வியாபாரம் களை கட்டி உள்ளது.

Thattu Vadai Set -தேனி மாவட்டம் 70 கி.மீ., துாரம் வரை கேரள எல்லையை பகிர்ந்து உள்ளது. கூடலுார் நகராட்சியின் ஒரு பகுதி கேரளாவின் குமுளி நகருக்குள் உள்ளது. போடி மெட்டு கிராமம், தேனி மாவட்டத்துடன் இணைந்துள்ளது. இப்படி தமிழகமும், கேரளாவும் நில அமைப்பில் மட்டுமல்ல கலாச்சாரம், வாழ்வியல், உணவு முறைகளில் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.

கேரளாவின் மூணாறு நகரில் உணவுப்பொருட்களோ... ஸ்நாக்ஸ்களோ மனதை கவரும் வகையிலோ, வித்தியாசமாகவோ இருக்காது. ஆனால் குமுளியில் அப்படியில்லை. புட்டு, வெல்லம் சேர்த்த பாசிப்பருப்பு உருண்டை வடை, சிவப்பு அரிசி கஞ்சி, கல் ஆப்பம், முட்டைகறி, சுண்டல் குருமா, மோர்க்குழம்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கருவாடு கலந்த பொரியல் என கேரள உணவுகள் களைகட்டும்.

இப்போது கேரளாவை சேர்ந்த பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தேனி மாவட்டத்தில் காபி, டீக்கடைகள், பேக்கரிகள் திறந்து வருகின்றன. இவர்கள் பிரெட் ஆம்லெட், வெங்காய ஆம்லெட் (தோசை மாதிரி மிகவும் பெரிதாக இருக்கும். ஒரு ஆம்லெட்டை நான்காக மடித்து தருவார்கள்) சோமாஸ், வடை, லெமன் டீ, ஜூஸ் வகைகள் என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். தவிர கேரள டீக்கடைகளில் பணிபுரியும் கேரள வாலிபர்கள் (இவர்கள் பெரும்பாலும் முதுகலை பட்டம் பெற்றவர்கள்) வாடிக்கையாளர்களை உபசரிக்கும் விதமே அத்தனை பேரையும் கவர்ந்து விடுகிறது.

முட்டை வடை, உளுந்தவடை, பருப்பு வடை, போண்டா, பஜ்ஜி என விற்றுக்கொண்டிருந்த நம்மூரு மக்களின் டீக்கடைகளும் இந்த போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். குறிப்பாக இந்த போட்டியில் பெரியகுளம், கம்பம் வியாபாரிகள் முன்னணியில் உள்ளனர். கேரள டீக்கடைகள், கம்பத்திலோ, பெரியகுளத்திலோ தலையெடுக்கவே முடியாத அளவு வியாபாரத்திலும், உபசரிப்பிலும் நவீனத்தை புகுத்தி வருகின்றனர்.

இந்த போட்டியை எதிர்கொள்ள இவர்கள் உருவாக்கிய வடை தான் அடை வடை. பருப்பு வடைக்கு ஆட்டும் மசாலாவுடன் மேலும் சில பருப்பு வகைகளையும், அதற்கேற்ற ரெசிபிகளையும் கலந்து ஆட்டி, தோசை போல் தட்டையாக சுடுகின்றனர். இது அடை வடையாக மாறி விடுகிறது. உளுந்தம் மாவில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட மேலும் சில வேகவைத்த காய்கறிகளை கலந்து அதனையும் தோசை போல் தட்டையாக சுடுகின்றனர்.

பார்ப்பதற்கே இந்த வடைகள் நாவில் எச்சில் ஊறச் செய்யும் அளவுக்கு அழகிய வடிவமைப்பினை கொண்டுள்ளன. இதனை சாப்பிட விரும்புபவர்களுக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பாருடன் பறிமாறுகின்றனர். பின் என்ன ஒரு வடை சாப்பிட நினைப்பவர், மூன்று வடையினை கடந்து விடுகிறார். சுவையில் சுண்டி இழுக்கும் இது போன்ற வடைகளை தயாரிக்கும் கை பக்குவம் கேரள நாயர்களிடம் இல்லை. இதனால் பெரியகுளம், கம்பத்தில் நம்ம ஊரு வியாபாரிகளே வியாபாரத்தில் வெளுத்துக்கட்டுகின்றனர்.

மாவட்டத்தின் பிற ஊர்களில் குறிப்பாக மாவட்ட தலைநகரான தேனியில் அரை மணி நேரம் காத்திருந்தாவது கேரளாக்காரர்கள் திறந்துள்ள கடையில் தான் டீ சாப்பிட வேண்டும் என்கிற அளவுக்கு தான் வாடிக்கையாளர்கள் உள்ளனர். காரணம் கேரள வியாபாரிகளுடன் போட்டியிடும் அளவு தேனி (போடி, சின்னமனுார், ஆண்டிபட்டி, கூடலூரிலும் இதே நிலை தான்) வியாபாரிகள் தயாராகவில்லை. இன்னொரு பெரிய பிரச்சிடனை தேனியில் விண்ணை முட்டி நிற்கும் விலைவாசி. ஒரு சாதாரண வடையின் விலை, முதல் தர டீக்கடைகளில் 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு பப்ஸ் 22 ரூபாய், டீ 16 முதல் 19 ரூபாய் வரை, காபி 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நடுத்தர கடைகளில் வடை 8 ரூபாய், டீ, காபி 15 ரூபாய். ஆக ஒரு டீ, வடை சாப்பிட 25 ரூபாய் செலவிட்டே ஆக வேண்டும். இதனை விட கொடுமை தேனியில் எந்த டீக்கடைகளிலும் அமர்ந்து சாப்பிட இடம் இல்லை. நின்று கொண்டு தான் சாப்பிட வேண்டும்.

இந்த பலகீனத்தை உணர்ந்த கேரள வியாபாரிகள் உட்கார்ந்து சாப்பிட வசதி செய்து தந்துள்ளதோடு, குளிர்ந்த காற்றுக்கு பேன் வசதி, மிகவும் பணிவு கலந்த அன்பான உபசரிப்பு என அசத்துகின்றனர். தேனி மாவட்டத்தின் இதர பகுதி வியாபாரிகளும் கம்பம், பெரியகுளம் வியாபாரிகள் போல் மாறினால் உண்டு வாழ்வு. இல்லையென்றால் இன்னும் பல கேரளா கடைகளை தேனி மாவட்டத்தில் எதிர்பார்க்கலாம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
குளிர்காலத்தில் உங்க மூக்கு ரொம்ப அடைச்சு மூச்சு விட சிரமமாக இருக்கா..? அப்போ இதை குடிச்சு பாருங்க..!