சலவை தொழிலாளியை அசத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

சலவை தொழிலாளியை அசத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
X

சலவை தொழிலாளி வீட்டில் சாப்பிடும் சிவாஜி- கமலாம்மாள்.

நடிகர் திலகம் தன் துணைவியாரோடு தஞ்சைக்கு வருகிறார்.

காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு தெரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுகிறார். வண்டியிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்கிறார் தன் துணைவியாருடன். ஒரு சாதாரண குடிசை முன் நிற்கிறார். நடிகர் திலகம் வந்ததையறிந்து தெருவில் மக்களின் ஆரவாரங்கள்.

ஏதோ சத்தம் கேட்கிறதே என எண்ணி வீட்டிற்குள் இருந்து ஒருவர் எட்டி பார்க்கிறார்.தன் வீட்டின் வாசலில் வந்து நிற்கும் நடிகர் திலகத்தையும் அவர் மனைவியையும் பார்த்து வார்த்தைகள் வராமல் தவிக்கிறார். கண்களில் ஆனந்தக் கண்ணீர். அண்ணே வாங்கண்ணே என்கிறார்.அதற்குள் வீட்டிற்குள் இருந்து பத்து நாட்களுக்கு முன் மணம் முடித்த தம்பதியினர் வருகிறார்கள்...அவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள். தம்பதி சகிதம் நடிகர் திலகம் ஆசி வழங்குகிறார்கள். டிரைவர் இரண்டு பைகளை கொண்டு வந்து தருகிறார். அதனை மணமக்கள் கையிலே கொடுக்கிறார் கமலாம்மாள்.

இரண்டொரு வார்த்தை பேசி விட்டு நகர்கிறார்கள். அப்பொழுது குடிசை வீட்டின் உரிமையாளர் நடிகர் திலகத்திடம் அண்ணே ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்க என்று சொல்கிறார். உடனே தன் மனையாளை பார்க்கிறார்.தண்ணீர் வாங்கி கைகளை அலம்பி விட்டு குனிந்து குடிசைக்குள் நுழைந்து தரையில் அமர்கிறார்கள். வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சாப்பிட அழைத்து விட்டோமே என்று பதட்டத்தில் அழைத்தவர் முழிக்க பரவாயில்லை. இருப்பதை சாப்பிடுகிறேன் என்று சொல்லி அவர்களால் உள்ளன்போடு பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள்.

தன் மகனின் திருமண விழாவிற்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பிய ஒரு சாதாரண ரசிகனை ஞாபகத்தில் வைத்து தஞ்சை வந்த நேரத்தில் அவர்களின் இல்லம் சென்று ஆசி வழங்கியதோடு மட்டுமில்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிட்டு ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய பாசமிகு நடிகர் திலகமும் கமலாம்பாளும். சிவாஜிக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பி தனது வீட்டிற்கு வரவழைத்து உபசரித்த இந்த ரசிகர் ஒரு சலவை தொழிலாளி என்று கூடுதல் தகவல்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி... ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.

நல்ல குரல் வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன்.

சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல்எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.

Tags

Next Story