100 ஆண்டு பழமையான அரசமரம்; இந்து எழுச்சி முன்னணி நடவடிக்கை

100 ஆண்டு பழமையான அரசமரம்; இந்து எழுச்சி முன்னணி நடவடிக்கை

நுாறு ஆண்டு பழமையான அரசமரத்தை வேறு இடத்தில் மாற்றி நடவு செய்ய அனுமதி கேட்டு இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் நகராட்சி நிர்வாக மேலாளரிடம் மனு கொடுத்தனர்.

100 ஆண்டு கால பாரம்பரியமிக்க அரச மரத்தை வெட்டாமல் இடம் மாற்றி அமைக்க இந்து எழுச்சி முன்னணி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சின்னமனுாரில் உழவர்சந்தை அமைந்துள்ள வளாகத்தில் முனீஸ்வரன் கோயிலும், 100 ஆண்டுக்கும் மேற்பட்ட அரச மரமும் உள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் இங்கு கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விடுவதற்காக அரச மரத்தை வெட்டத் தொடங்கியது. இதனை அறிந்த சின்னமனுார் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சின்னமனுார் மக்கள் இதற்கு எதிர்ப்பு காட்டிய போது, ஒட்டுமொத்த தேனி மாவட்ட மக்களும் சின்னமனுார் மக்களுக்கு ஆதரவாக நின்றனர். இந்த விஷயத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டது. நகராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து மரம் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சின்னமனுார் நகர இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் தேனி நகர அமைப்பாளர் வெற்றிவேல், தலைமையில் சின்னமனூர் நகராட்சி மேலாளர் வாசுகியிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில்: சின்னமனூர் நகராட்சி வார்டு 8 எல்கைக்கு உட்பட்ட ஸ்ரீமுனீஸ்வரன் கோயில், உழவர்சந்தை அருகில் நூறாண்டு கால பாரம்பரியமிக்க "அரசமரம் " ஒன்று உள்ளது. அந்த மரத்தை தற்போது நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக வெட்டும் முயற்சிகள் நடக்கிறது. பாளையம் பசுமை செந்தில் ஆலோசனையின் பெயரில் மரத்தை வெட்டாமல் நகராட்சி நிர்வாக செலவில் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். தவறும் பட்சத்தில் நன்செய்தன்னார்வலர்களின் தலைவர் பசுமைசெந்தில் தலைமையில் மரத்தை வெட்டாமல் மாற்றி அமைக்க ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட நகராட்சி நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் மரத்தை மாற்றி அமைப்பதற்கு சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்துள்ளனர். பசுமைசெந்தில், பனைமுருகன், மற்றும் சின்னமனூர் இந்து எழுச்சி முன்னணி, நகர பொறுப்பாளர்கள் விக்னேஷ் , முத்துச்சாமி , பாளையம் ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பருதி உடன் இருந்தனர்.

Next Story