பணியாளரை தரக்குறைவாக திட்டிய வார்டு கவுன்சிலர் மீது நடவடிக்கை..!

பணியாளரை தரக்குறைவாக திட்டிய  வார்டு கவுன்சிலர் மீது நடவடிக்கை..!
X

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கவுன்சில்கூட்டம்  தலைவர் மிதுன்சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது.

பணியாளரை தரக்குறைவாக திட்டிய வார்டு கவுன்சிலருக்கு பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தேனி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மணிமாறன், நிர்வாக அலுவலர் யோகஸ்ரீ, கவுன்சிலர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் குடிநீர் வழங்கல் பிரிவில் தண்ணீர் திறப்பாளராக பணிபுரியும் மணிகண்டன், தலைவரிடம் புகார் மனு கொடுத்தார்.

மனுவில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், (பேரூராட்சி தி.மு.க., செயலாளராகவும் இருக்கிறார்) தன்னை ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அழைத்து திட்டியதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனு குறித்து தலைவர் மிதுன்சக்கரவர்த்தி கவுன்சில் கூட்டத்திலேயே விசாரணை நடத்தினார். அப்போது செல்வராஜ் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. எனவே தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, பணியாளரை திட்டியதற்காக ஒரு வாரத்திற்குள் வருத்தம் (மன்னிப்பு) தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என எழுத்துப்பூர்வமாக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இது குறித்து பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி கூறியதாவது:

செல்வராஜ் இதற்கு முன்னரும் பலமுறை அடிப்படை பணியாளர்களை ஒருமையில் அழைத்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். அவரிடம் இந்த அணுகுமுறையினை மாற்றிக் கொள்ள வேண்டும் என பலமுறை அறிவுறுத்தினோம். ஆனாலும் பலன் இல்லை.

இம்முறை அவர் மணிகண்டனை திட்டியதை கூட்ட அரங்கிலேயே ஒப்புக்கொண்டார். எனவே பணியாளரை தரக்குறைவான வார்த்தைகளால் அழைத்து திட்டியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 (அரசிதழ் வெளியீடு) நாள் 12.04.2023 விதி எண் 160 ன் கீழ் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அவர் தனது செயலுக்கு வருத்தம் (மன்னிப்பு) தெரிவிக்காவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்