தேனி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் நடத்தும் ரகசிய கணக்கெடுப்பு
தேனி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி, தி.மு.க., வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன், அ.ம.மு.க, வேட்பாளர் தினகரன்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., சார்பில் தங்க.தமிழ்செல்வன், அ.தி.மு.க., சார்பில் நாராயணசாமி, அ.ம.மு.க., சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகின்றனர். மூன்று வேட்பாளர்களுமே பிரச்சார களத்தில் கலக்கி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மூன்று அணியினரும் தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இதன்படி தேனி லோக்சபா தொகுதி முழுக்க வீடு, வீடாக புதிய கணக்கெடுப்பு நடக்கிறது. இதன்படி ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களது ஆதரவு வாக்காளர் யார்? நடுநிலையுடன் இருந்து கடைசி நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர் யார்? தங்களது எதிர்ப்பு வாக்காளர் யார்? என்ற பட்டியல் தயாராகி வருகிறது. இந்த பட்டியல் படி ஆதரவு வாக்காளருக்கு ஒருவிதமான மரியாதையும், நடுநிலை வாக்காளருக்கு கவர்வதற்கான மரியாதையும், செய்யப்பட உள்ளது. எதிர்ப்பு வாக்காளரை கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டியது தான் என்ற ரீதியில் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்த பட்டியல் அடிப்படையில் தான் தேர்தல் கவனிப்புகள் நடைபெறும்.
அதேபோல் எந்தெந்த பகுதிக்கு யார் மூலம் யார்? யார் கவரும் பணியில் ஈடுபட வேண்டும். எந்த தேதி, எந்த நேரம், எந்த சூழல் என எல்லா திட்டங்களும் முழுமையாக தயாராகி விட்டன. எனவே தேர்தல் பிரச்சாரக்களத்தின் முகம் இனி வரும் நாட்களில் வாக்காளர்களை கவரும் வகையில் மாற்றமடைய உள்ளது என கட்சி நி்ர்வாகிகள் தெரிவித்தனர்.
தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றி தோல்விகள் தொடர்பாக ஊடகங்கள் தான் தொகுதி வாரியாக கருத்து கணிப்பு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இப்போது வேட்பாளர்களே கணக்கெடுப்பு நடத்துவது வாக்காளர்களை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu