வரும் தேர்தலில் மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் யார்?

வரும் தேர்தலில் மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் யார்?
X

பைல் படம்

இந்தியாவின் தற்போதைய ஆளுங்கட்சியான பாஜகவுக்கு, எதிராக 15 கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன.

இந்தியாவின் தற்போதைய ஆளுங்கட்சியான பாஜகவுக்கு, எதிராக 15 கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. 2024 ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலை, ஒரு தலைமையில் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். மோடிஜியின் தலைமையில் பாஜக மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில், இந்த எதிர்க் கட்சிகளின் முனைப்பு, அதைப் பொய்யாக்கி, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான். இதை முன்னெடுத்தவர் பீகார் முதல்வர் நிதீஷ்குமார்.

கடந்த ஜூன் 23 அன்று பாட்னாவில் கூடிய, கூட்டத்திற்கு 15 முக்கிய கட்சித் தலைவர்கள் வந்தனர். பதவியில் இருக்கும் 4 மாநில முதல்வர்கள் ஸ்டாலின், மமதா பேனர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மகாராஷ்ட்ராவிலிருந்து NCP தலைவர் ஷரத்பவார், உத்தவ் தாக்கரே, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா, லல்லு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இதில் ஒத்த கருத்து எட்டப்பட்டதா? இது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு, இவர்களுக்குள் இருக்கும் முரண்கள், களையப்படுமா, என்பது பற்றி அதை நடத்தியவர்களே விளக்கமாகக் கூறி விட்டார்கள். மமதாவின் கருத்து, மோடி எதிர்ப்பு, தான் என்றாலும் அவர் காங்கிரஸூக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தரத் தயாரில்லை. கம்யூனிஸ்டுகளையும் எட்டவே நிற்க வைத்து விட்டார்.

நான் நிற்கும் இடத்தில் நீ விட்டுக் கொடுக்க வேண்டும் என்றுகாங்கிரஸூக்கு நிபந்தனை விதித்துள்ளார். கெஜ்ரிவால், காங்கிரஸ் மத்திய அரசு , கொண்டு வந்த, டெல்லியின் அதிகாரத்தைப் பிடுங்கும் அவசர சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்காததை குறை சொல்லி, அதைப் பற்றி காங்கிரஸ் பேச வேண்டும். அப்போது தான் மேற்கொண்டு கூட்டணி பற்றி பேச முடியும் என்றார்.

.தமிழக முதல்வரோ, ஏழு அம்ச தீர்மானத்தை விவரித்து, மாநிலங்களில் வலுவாக இருக்கும் கட்சியின் தலைமையில் கூட்டணி தேர்தலை சந்திக்க வேண்டும். இது சரிப்படவில்லை என்றால், தொகுதிப் பங்கீடு செய்து கொண்டு போட்டியிடலாம். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரி வராது என்று பேசி இருக்கிறார். முக்கியமாக, இந்த கூட்டத்திற்கு சிலரை, இவர்கள் அழைக்கவேயில்லை.ஒடிஷாவின் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் BRS கட்சி சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி, உபியின் மாயாவதி போன்றவர்கள் வர மாட்டார்கள் என்பதால் அழைக்கவே இல்லை.

தென்னகத்தில் தமிழகம் மட்டுமே கலந்து கொண்டது. என்றாலும், ஒரு முன்னெடுப்பு துவங்கி அதற்கான முதல் கூட்டம் நடக்கும் போதே, எல்லா முரண்பாடுகளும் தீர்ந்து, ஒன்றுபட்ட முடிவு எட்டப்பட்டு விடமுடியும் என்பது ஒத்த கருத்துள்ள கட்சிகளுக்கிடையே கூட சாத்தியமில்லாத ஒன்று. மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களை முதலில் ஒரு மேடையில் கூட்டியதே ஒரு நல்ல ஆரம்பமாக அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். இந்த கூட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு இது, அரசியல் சதுரங்கத்தில் ஆடப் போகும் இறுதிக் கட்ட ஆட்டமாக இருக்கும் என்பதைத் தெரிந்து தான் ஆடுகிறார்கள். இப்போது இல்லையென்றால், இனி எப்போதும் இல்லை என்ற நிலை. பேசித் தீர்க்க முடியாத விவகாரங்கள் என்று எதுவும் இல்லை.

நமது பொது எதிரி பாஜக-மோடி இவர்களை தோற்கடிப்பது என்பது தான் ஒற்றை இலக்கு. ஆனால், சரத் பவார் பிரதமர் போட்டியில் இல்லை. தனது கட்சியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் அவர் கவனம் செலுத்துகிறார். இப்போது புது தலைவலி, BRS சந்திரசேகரராவ் ரூபத்தில் உருவெடுத்துள்ளது. தேசிய கட்சியாக அறிவித்ததையடுத்து, அது மஹாராஷ்ராவில் களம் இறங்குகிறது. NCP யில் இருந்து பலர் BRS கட்சியில் இணைய ஆரம்பித்துள்ளனர்.

மாயாவதி, ஆந்திர முதல்வர் ரெட்டி, சந்திரசேகரராவ், மூவரும், காங்- பாஜக இரண்டையும் சம தூரத்தில் வைக்க முடிவு செய்துள்ளனர். ஆம்ஆத்மி பல மாதிலங்களிலும் பாஜகவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் காங்கிரஸோடு கூட்டு வைத்து தங்கள் கட்சியின் எதிர்காலத்திற்கு ஆப்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. மமதாவுக்கும், காங்கிரஸூக்கு மற்ற மாநிலங்களில் நிபந்தனையோடு கூடிய ஆதரவே தர நினைக்கிறது.

அது ஆம் ஆத்மி பார்ட்டி , தன்னைச் சீண்டாத வரை அவர்களை ஒதுக்காது. இப்படி, எல்லா கட்சிகளும் மோடியால் பாதிப்புக்குள்ளானவர்களின் கூட்டமைப்பாக உள்ளன. இதனிடையில் அடுத்த கூட்டத்தை பெங்களூருவில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, அந்த கூட்டத்தில் நடவடிக்கைகள் பரஸ்பரம் பேசித் தீர்க்க வழிவகை செய்யக் கூடும். பொதுவாக பாஜக ஆதரவாளர்கள், ஆம்ஆத்மி கெஜ்ரிவால், தமிழகத்தின் ஸ்டாலின் போன்றவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணித்தது, காங்கிரஸ்- ஆம்ஆத்மி கருத்து வேறுபாடுகள், மமதா. காங்., முரண்பாடு, இதையெல்லாம் வைத்து கூட்டம் படுதோல்வி என்று, பலர் விமர்சனம் செய்தாலும், அடுத்த கூட்டத்தில் இவர்கள் அத்தனை பேரும் சில விட்டுக்கொடுத்தல்கள் மூலம் நெருங்கி வரக்கூடும்.

இந்நிலையில் திடீரென ஆம்ஆத்மி டில்லியிலுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் தனியாகப் போட்டியிடும் என்று அறிவித்துவிட்டது. BRS கட்சியும் தெலுங்கானாவில் தனித்தே களம் காணக்கூடும். பாஜக இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். தனக்கு வெற்றி நிச்சயம் என்று அசாத்திய நம்பிக்கையில் இருந்து விடக் கூடாது. பல குழப்பங்கள் ஏற்படக்கூடும். சில நேரங்களில் சதிகள் கூட நடைபெற வாய்ப்புகளும் உண்டு.

எனவே பா.ஜ.க,விற்கு கவனம் தேவை. இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியை சென்ற முறை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். இம் முறை, கண்டு கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிதிஷ்குமார் தான் கூட்டணியின் தலைவராக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதை காங்கிரஸ் ஏற்காது. ஆக, மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே அணியில் திரண்டு நிற்கும் என்பது பகல்கனவுதான். இது முடிவானால் பாஜகவும் தனது வியூகத்தை அமைக்கக் கூடும். ஒரு வேளை எதிர்கட்சிகள் நெருங்கி வந்து, அதிசயம் நிகழ்ந்தாலும், பிரதமர் வேட்பாளரை முதலிலேயே அறிவிக்காது என்றே தோன்றுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!