திமுக வில் ஓசையின்றி உருவாக்கப்படும் புதிய உளவுப்படை ?

திமுக வில்  ஓசையின்றி உருவாக்கப்படும் புதிய உளவுப்படை ?
X

சபரீசன் (பைல் படம)

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிவிட்ட நேரத்தில் ஓசைப்படாமல் காரியத்தில் இறங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்

கடந்த இரண்டு தேர்தல்களாக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீம் தமிழகம் முழுவதும் திமுகவுக்காக களப்பணி செய்தது. ஐ-பேக் வகுத்துக் கொடுத்த வழியிலேயே ஸ்டாலினும் 'நடந்தார்'. 2014இல் பாஜக ஆட்சியமைத்தற்கு பல காரணங்களில் முக்கியமான ஒன்று பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம். புதிய தேர்தல் வியூகங்களை வகுத்து தொழில்நுட்ப ரீதியாக மக்களை எளிதில் சென்றடைந்து அவர்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

கட்சியினரை ஒதுக்கி வைத்துவிட்டு ஐ- பேக்கை அழைத்து வந்ததில் சபரீசனுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால், தமிழகம் முழுவதும் களமிறக்கப்பட்ட ஐ-பேக் ஊழியர்களில் சிலரை ஆங்காங்கே திமுக பெருந்தலைகள் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். இதனால் உண்மை நிலவரம் அறிவாலயத்தை எட்டாமல் போனது. இதனால் வேட்பாளர் தேர்விலும்கூட குழப்பங்கள் நடந்ததாக அப்போது செய்திகள் கசிந்தன.

இந்த நிலையில், ஐ - பேக் டீம் தயாரித்து வைத்திருந்த தரவுகளின் அடிப்படையில் மாநிலம் முழுமைக்கும் திமுகவுக்குள்ளேயே உளவுப்படை ஒன்றை உருவாக்கி வருகிறார் சபரீசன். இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுப்படை தளபதி ஒருவர் இருப்பார். அந்த மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ஒருவர் வீதம் உளவுப்புள்ளிகள் இருப்பார்கள். இவர்கள் தங்களுக்குக் கீழே வரும் நகரம், ஒன்றியங்களுக்கு தலா ஒருவர் வீதம் உளவு ஆட்களை நியமிப்பார்கள். இதுதான் சபரீசன் உருவாக்கி வரும் உளவுப்படை.

இந்தப் படையில் இருப்பவர்கள், மனதில் பட்டதை யாருக்கும் பயமில்லாமல் பட்டென சொல்லக் கூடியவர்களாக இருப்பார்களாம். தலைமையே தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டும் தைரியம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதேசமயம், இவர்கள் தங்கள் பகுதியில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்களாகவும் எதற்கும் சபலப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது சபரீசனின் உத்தரவாம்.

இத்தகைய தகுதிகளுடன் உளவுப்படைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அநேகமாக ஜனவரியில் இது முழு வடிவம் பெற்று உளவுப்படையினர் களத்தில் இறங்கி விடுவார்கள் என்கிறார்கள். உள்ளாட்சிகளில் அதிகாரத்தில் இருக்கும் திமுக பொறுப்பாளர் களையும் திமுக எம்பி, எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களின் அத்தனை அசைவுகளையும் கண்காணித்து தலைமைக்கு தகவல் அனுப்புவதே இந்த உளவுப்படையின் பிரதான வேலையாக இருக்கும் என்கிறார்கள்!.

இனிமேல் இந்த உளவுப்படை கொடுக்கும் முழு தகவல்களின் அடிப்படையில் தான் தி.மு.க.வின் ஆட்சி அதிகாரமும் இருக்கும். கட்சியின் எதிர்காலமும் இருக்கும். மக்கள் தி.மு.க., பற்றி என்ன நினைக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் என்ன எதிர்பார்க்கின்றனர் போன்ற துல்லியமான புள்ளி விவரங்களை பெற்று ஆட்சி நடத்துவதன் மூலம், மக்களின் ஆதரவை பெற முடியும். இதற்காக இந்த உளவுப்படைக்கு மாதந்தோறும் பல நுாறு கோடி செலவிட தயாராக உள்ளதாக தி.மு.க. மேலிட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா