எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான அரசியல் களம்...!

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான அரசியல் களம்...!
X

எடப்பாடி பழனிசாமி(பைல் படம்)

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸை பிரசாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என கூறப்படுகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் வாங்கி வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசுக்கு தற்போது மொத்தமுள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். 145 உறுப்பினர்கள் தென்னரசுவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்தநிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய ஆவணங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார்.

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான கடிதத்தை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து திமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியிலிருந்து திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு போட்டியிடுகின்ற வேட்பாளரை தேர்வு செய்கின்ற வகையில் சுற்றறிக்கையின் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று வேட்பாளரை தேர்வு செய்கின்ற பணிகளை மேற்கொண்டு பெரும்பான்மை ஆதரவுடன் வேட்பாளரை தேர்வு செய்து அதற்குரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. இதுவே எங்களுக்கு முதல் வெற்றி. எனவே நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து முறைப்படி தான் நாங்கள் சுற்றறிக்கையின் மூலம் வேட்பாளரை தேர்வு செய்கின்ற பணிகளை நடத்தி இருக்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனைப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அதிகாரப்பூர் வேட்பாளராக தென்னரசு பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸை பிரசாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்" என அவர் கூறினார். அவைத்தலைவரின் இந்த பேட்டி மூலம் ஓபிஎஸ் பிரசாரத்தை அதிமுக விரும்பவில்லை எனத்தெரிகிறது. அதேசமயம் தேர்தல் களத்தின் சூழல்களும் இ.பி.எஸ்.க்கு ஆதரவாக உள்ளதாக தெரிகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!