Mullaipperiyar Protection Council என்ற கட்டப்பஞ்சாயத்து கும்பல்..!

முல்லை பெரியாறு அணை (கோப்பு படம்)
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர், ச.பென்னி குயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
Mullaipperiyar Protection Council என்ற பெயரில் ஒரு கும்பல் கேரளாவில் கட்டப்பஞ்சாயத்தை விட மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓணம் திருநாளன்று இடுக்கி மாவட்டம் பீருமேடு தாலுகாவில் உள்ள உப்புதுறையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை வேண்டும் என்று உண்ணாவிரதம் ஒன்றை நடத்தியது முல்லைப் பெரியாறு ப்ரொடக்ஷன் கவுன்சில்.
அதில் கலந்து கொண்டதோடு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த முக்கிய விஐபி, உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்கிற உத்தரவை வாங்கி வந்ததாக பெருமை பீற்றிக் கொள்ளும் டாக்டர் ஜோ ஜோசப்.
முழுக்க முழுக்க கிறிஸ்தவ வலதுசாரி ஆயர்களும், பேராயர்களும் பங்குபெற்ற அந்தக் கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் ஷாஜி பி ஜோசப் கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
அதாவது சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி,, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ரமேஷ் காஷ்யப் தலைமையில் நடந்த கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையை 12 மாதங்களுக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை மேற்கோள்காட்டி பேசிய ஷாஜி பி ஜோசப்,
முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச அளவிலான புகழ்பெற்ற நீரியல் நிறுவனம் ஆய்வு செய்ய மத்திய நீர்வள ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் மத்திய அமைச்சர்களான கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் குரியன் மற்றும் சுரேஷ்கோபி ஆகியோரை அணுகி பேச இருக்கிறோம் என்று முழங்கி இருக்கிறார்.
ஷாஜி ஜோசப் போன்றவர்கள் இந்த நாட்டின் அறிவியல் மீதும், இந்த நாட்டின் அறிவியலாளர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்கள் என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது அப்பட்டமான தேச துரோகமும் கூட...
கடந்த 2011 ஆம் ஆண்டு இதே முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்த, மத்திய நீர்வள அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி.டி.தத்தே மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் டி கே மேத்தா, ஆகிய இருவரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நீரியல் நிபுணர்கள் என்பது ஜோசப் போன்ற அரைவேக்காடுகளுக்கு தெரிவதற்கு நியாயம் இல்லை.
அவர்கள் இருவரும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு சென்று ஆய்வு செய்தவர்கள் என்பது மாத்திரமன்றி, சர்வதேச அளவிலும் பல அணைகளை ஆய்வு செய்தவர்கள். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-23-24 ஆகிய மூன்று தேதிகளில் இதே முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ததோடு, அணை எல்லா நிலையிலும் பலமாக இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவிடம் அறிக்கை அளித்தவர்கள்.
நிலவியல் ரீதியாக முல்லைப் பெரியாறு அணையை குறித்து ஆய்வு செய்த அவர்களை விட, சர்வதேச அளவிலான ஒரு நிறுவனம் எப்படி ஆய்வு செய்து விட முடியும். அணை எங்கு இருக்கிறது என்று தெரியாமலேயே, கூகுளில் தேடிப் பிடித்து, கூமுட்டைகளின் அறிக்கைகளை வாசித்து, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக செய்தி வெளியிட்டது எவ்வளவு முட்டாள்தனமோ... அதைவிட முட்டாள்தனம், சி.டி.தத்தே மற்றும் டி கே மேத்தா ஆகியோரின் ஆய்வை விட, சர்வதேச ஆய்வு நிறுவனம் சிறப்பாக செய்யும் என்பது.
இவர்கள் உண்ணாவிரதம் நடத்திய உப்புத்துறை என்கிற ஊர் உருவாகி முழுமையாக 22 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆற்றின் ஓரத்திலும் ஆற்றின் அருகாமையிலும் எங்கிருந்தோ வந்து குடியேறிய இவர்கள், இன்று ஆற்றை குறை சொல்வது வேடிக்கையானது.
அதுபோல முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளா முழுவதும் கொண்டு போய் சேர்த்த, சப்பாத்து கிராமம், முழுக்க முழுக்க முல்லைப் பெரியாற்றின் அருகாமையில் நீரியல் விதிகளுக்கு முரணாக, அத்து மீறி கட்டப்பட்ட வீடுகளால் நிரம்பிக் கிடக்கிறது.
காலங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் நடுவே இவர்கள் வீடுகளை கட்டிக் கொள்வார்களாம். தண்ணீர் வரும்போது ஐயோ எங்கள் வீடுகள் தண்ணீரில் மூழ்கப் போகிறது என்று ஒப்பாரி வைப்பார்களாம். உள்ளபடியே முல்லைப் பெரியாறு கேரளாவில் பள்ளத்தாக்கில் ஓடும் ஒரு நதியாகும். அப்படி பள்ளத்தாக்கில் ஓடிய ஒரு நதியை, தேடிப் பிடித்து வந்து இது போன்ற வலதுசாரி கும்பல் குறை சொல்வது என்பது உள்ளபடியே நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.
சர்வதேச நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுத்தால், கண்டிப்பாக அதற்கான விளைவை அது எதிர்கொள்ள நேரிடும். முறையாக கடந்த 7-5-2014 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதி அரசர்கள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் கொடுத்த தீர்ப்பின்படி, பேபி அணையை பலப்படுத்த வேண்டும். பேபி அணையை பலப்படுத்தி விட்டு தான், மத்திய நீர்வள ஆணையம் அணையில் முழு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டம் தேனி,திண்டுக்கல்,மதுரை மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வெடிக்கும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் குமுளி எல்லையில் அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து ஒரு முற்றுகை போராட்டத்தை நடத்த இருக்கிறது.
இதை வாசிப்பவர்கள் அவசியம் அதில் கலந்து கொண்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu