முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு தோல்வியா?
முல்லைப்பெரியாறு அணை (பைல் படம்).
சமீபகாலமாக முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழக விவசாயிகள் போராட்டம் எதையும் நடத்தவில்லை. குறிப்பாக சிறிய சங்கங்களான பாரதீய கிஷான் சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் முல்லைப்பெரியாறு அணை பற்றி வாய் திறக்கவே இல்லை. மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்ததோடு தங்கள் பிரச்சினை முடிந்ததாக நினைத்து மவுனம் காக்கின்றனர்.
மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற வலுவான சங்கமான பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமோ தனது அடிப்படை கோரிக்கையான கேரளாவின் தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையினையே கை விட்டு விட்டது. கேரளா நினைத்தபடி ரூல் கர்வ் முறையினை அமல்படுத்தி நீர் மட்டத்தை உயர்த்த விடாமல் தடுத்து விட்டது.
டெல்லியில் நடந்த முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக்குழு கூட்டத்திலும் பேபி அணையினை பலப்படுத்த இடையூறாக உள்ள 15 மரங்களை வெட்ட வேண்டும் என்ற தமிழக அதிகாரிகளின் கோரிக்கையினை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தேதி அறிவித்தவர்கள் தற்போது அது பற்றி பேசவில்லை. மாறாக தற்போது பெரியாறு அணை பிரச்சினையில் தாங்கள் பெற்ற தோல்வியை மறைக்க தமிழக விவசாயிகள் கொடைக்கானல்- மூணாறு ரோடு பிரச்சினை பற்றி பேசி வருகின்றனர். எங்களின் இந்த சந்தேகம் முற்றிலும் சரி என்பதை கேரள உளவுத்துறையும் உறுதிப்படுத்தி உள்ளது. கேரளாவிற்கு கடும் நெருக்கடி தந்த பிரச்சினையை தமிழக விவசாயிகள் திடீரென ஒத்தி போட்டதில் ஏதோ பின்னணி உள்ளது என சில கேரள பத்திரிகைகள் எழுதியற்கும் கூட தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பதிலளிக்கவில்லை. தவிர தமிழக விவசாய சங்கங்களின் நிர்வாகிகளை பற்றி தனிப்பட்ட முறையில் கேரள பத்திரிகைகள் மோசமாக விமர்சித்தும், அவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. தமிழக விவசாயிகளின் இந்த மாற்றத்திற்கு காரணம் தோல்வி மட்டுமா என தெரியவில்லை என்று கேரள பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
கேரள நிருபர்களின் இந்த பேச்சு பற்றி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கும் முழுமையாக தெரிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பலர் இந்த விஷயங்களை பற்றி தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் பலமுறை பேசியும் உள்ளனர். தேனி மாவட்டத்தில் பரபரப்பான விவாதப்பொருளாக மாறி உள்ள இந்த விஷயம் குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அன்வர் பாலசிங்கம் தலைமையில் ஒரு விளக்கம் அளித்துள்ளனர். தமிழக விவசாயிகள் சிலர் தனிப்பட்ட முறையில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதன் சாரம்சம் வருமாறு: 'நாங்கள், அதாவது தமிழக விவசாயிகள் முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையில் எங்கு தோற்றோம் என்பதை பற்றி கேரள நண்பர்கள் தெளிவுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது, பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் சேர்க்கும் போராட்டம் குறித்து நாங்கள் செய்து வரும் வியூகங்களை பற்றி கேரள நண்பர்களுடன் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இந்த பிரச்சினைகளில் பதிலடி தரும் போது தற்போதைய எங்களின் மவுனத்திற்கான காரணம் புரியும். இனி நாங்கள் இதனை தொட்டால், ஒருநொடியும், ஒரு துளியும் பின்வாங்காத அளவுக்கு வியூகம் வகுத்து வருகிறோம்.. கேரளாவில் பலர் பகிரங்கமாக முல்லைப்பெரியாறு அணை பிரச்னை பற்றி பேசி பணம் சம்பாதித்து கோடீஸ்வரர்களாக மாறி உள்ள நிலையில் கூட, அவர்களின் அட்டூழியங்கள், அழிச்சாட்டியங்கள் பற்றி முழுமையாக தெரிந்தும், தமிழக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதள பத்திரிகை நிருபர்கள் ஒருவர் கூட கேரள விஷமிகள் பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட தப்பாக பேசவில்லை.
ஆனால் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை தமிழக விவசாயிகள் பற்றியும், முல்லைப்பெரியாறு அணைக்காக போராடுபவர்கள் பற்றியும் தனிப்பட்ட முறையிலும், பொதுவான முறையிலும் கேரளாவில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சோசியல் மீடியாக்களில் தவறாகவும், தரக்குறைவாகவும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இது தமிழர்களின் நாகரீகத்திற்கும், கேரளாவின் அநாகரீகத்திற்கும் இடையிலான வேறுபாடு. கேரளாக்காரர்கள் இப்படி அநாகரீகமாக விமர்சிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். நாங்கள் எதிர்பார்த்தது நடந்ததால் அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்காக போராடவே நேரம் இல்லை. இந்த நிலையில் ரோடு பிரச்சினை தேவையா என்பது பற்றி சிலர் கேட்கின்றனர். இந்த ரோடு அமைவதன் மூலம் 28 மலைக்கிராமங்கள் அதே எண்ணிக்கையிலான எஸ்டேட்களில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை மார்க்கெட்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும். மலைக்கிராம மக்களின் வாழ்வில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இந்த ரோடு பற்றி நாங்கள் பேசியதும் கேரளா ஏன் பதறுகிறது என்பது எங்களுக்கு பெரிய ஆச்சர்மாக இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணைக்காக நாங்கள் போராடும் போது, எங்களிடம் கேரளா காட்டிய கோபத்தை விட, அதிக கோபத்தை இந்த ரோடு பிரச்சினையில் காட்டி வருகிறது. ரோடு அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்காக இவ்வளவு பெரிய கோபத்தை எங்கள் மீது காட்ட வேண்டிய காரணம் எங்களுக்கு இதுவரை புரியவில்லை.
இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu