75 ஆண்டுகால கோரிக்கை.. மூணாறு- கொடைக்கானல் ரோடு அமையுமா?
பைல் படம்.
கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், பூண்டி வழியாக கிளாவரை சென்று, அங்கிருந்து 11 கிலோமீட்டர் பயணித்து, டாப் ஸ்டேஷனை அடைய வேண்டும். அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல், கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடையலாம்.
இந்தப் பாதை வழியாகவே வட்டவடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானல் கொண்டு வந்து வியாபாரம் செய்துள்ளனர். ஆனால் 1956ம் ஆண்டு மொழிவழிப் பிரிவினை துரதிஷ்டவசமாக வட்டவடை, கோவிலூரை கேரளாவோடு இணைத்தது.
2003 ஆம் ஆண்டு கேரள அரசு எஸ்கேப் ரோட்டை மறித்து, அதை பாம்பாடும் சோலை தேசிய பூங்காவாக அறிவித்தது. இதன் மூலம் டாப் ஸ்டேஷன் தாண்டியதும் கிளாவரை வரை சென்று தமிழகத்தை இணைக்கும் எஸ்கேப் ரோட்டினையும் மூடியது கேரள அரசு. இதனால் இக்கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள் 50 சதவீதம் பேர் கேரளாவிலும், 50 சதவீதம் பேர் தமிழகத்திலும் என பிரிந்து விட்டனர்.
ஜீப்களில் ஓரளவு பயணித்து வந்த இரண்டு பக்கமும் உள்ள தமிழர்கள், இப்போது கேரள மாநில வனத் துறையால் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். வெறும் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பயண சாலையை இழுத்துப்பூட்டியதன் மூலம், மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை வட்ட வடை கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழும் தமிழர்கள் மீது திணித்திருக்கிறது கேரள மாநில அரசு. விரைவில் இந்த சாலையை திறக்க வேண்டும் என்று இந்த 28 கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் இதற்கு தன் முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
இரண்டு மாநில அரசுகளும் இதற்கு ஒரு முன் முயற்சியை எடுக்க வேண்டும். இல்லையேல் வட்டவடை, கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராம மக்களையும், கிளாவரை, மன்னவனூர்,பூண்டி உள்ளிட்ட 16 கிராம மக்களையும் ஒன்றாக திரட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu