24 மணி நேர பணி: விடுமுறை எடுத்தால் சம்பளம் 'கட்' - போலீசார் குமுறல்

24 மணி நேர பணி: விடுமுறை எடுத்தால் சம்பளம் கட் - போலீசார் குமுறல்
X

பைல் படம்

வார விடுமுறை எடுக்கும் போலீசாருக்கு ஈ.டி.ஆர்., கட் செய்வது, மிகப்பெரிய ஏமாற்று வேலை என போலீசார் கொந்தளிக்கின்றனர்.

வாரம் ஒருமுறை போலீசாருக்கு விடுமுறை வழங்கப்படும் என டி.ஜி.பி., அறிவித்துள்ள நிலையில், விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது என போலீசார் கொந்தளிக்கின்றனர். சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றது முதல் போலீஸ் மற்றும் பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில் ஒன்று தான் போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்ற அறிவிப்பு. தவிர போலீசாரின் பிறந்தநாள், திருமண நாட்களிலும் விடுமுறை வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதனால் போலீசார் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் நடைமுறைக்கு வரும் போது அந்த அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம் போல் தெரிகிறது என போலீசார் கொந்தளிக்கின்றனர். இது குறித்து தேனி மாவட்ட போலீசார் கூறியதாவது: போலீசார், கிரேடு ஒன் போலீசார் முதல் தலைமைக்காவலர் வரை வாரம் முழுவதும் வேலை செய்தால், ஒரு நாள் ஈ.டி.ஆர்., (எக்ஸ்ட்ரா டைம் ரெமுனேரேசன் அதாவது கூடுதல் நேரடி ஈட்டுப்படி) சம்பளம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நடைமுறை போலீசில் பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது வாரம் ஒருமுறை விடுமுறை என அறிவித்து விட்டு, விடுமுறை எடுப்பவர்களுக்கு வழங்கப்படும் ஈ.டி.ஆர்., 500 ரூபாயினை பிடித்தம் செய்து கொள்கின்றனர். இதற்கு ஏன் இப்படி போலீசாருக்கு நல்லது செய்வது போல் நாடகம் நடத்த வேண்டும்.

எங்களுக்கு ஈ.டி.ஆர்., உடன் விடுமுறை வழங்கினால் தான் பலன் கிடைக்கும். காரணம் நாங்கள் பிற அரசுத்துறைகளைப்போல் 8 மணி நேர பணியாளர்கள் இல்லை. நாங்கள் 24 மணி நேர பணியாளர்கள். அதேபோல் நாங்கள் பல துறைகளை போல் இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு போகாமல் முழுநேர சம்பளம் பெறவில்லை.

இதெல்லாம் போலீசில் கேட்டால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் தொல்லை கொடுப்பார்கள். எனவே நாங்களே கோரிக்கை மனுவாக எழுதி அரசுக்கு அனுப்பி உள்ளோம். தவிர நாங்கள் அரசுக்கு எழுதிய மனு போலீசார் பயன்படுத்தும், அல்லது போலீசார் பங்கு பெறும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்றனர்.

Tags

Next Story