விவசாயத்தை வீழ்த்திய கிராம நுாறு நாள் வேலை

விவசாயத்தை வீழ்த்திய கிராம நுாறு நாள் வேலை
X

பைல் படம்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கிராம நுாறு நாள் வேலை திட்டம் ஒட்டுமொத்தமாக விவசாயத்திற்கு வேட்டு வைத்துள்ளது

இந்தியாவை பொறுத்தவரை அதிகளவில் நிலம் வைத்துள்ள பெரும் முதலாளிகள் எண்ணிக்கை மிக, மிக குறைவு. 85 சதவீதம் பேர், 2 ஏக்கர், 5 ஏக்கர், 10 ஏக்கர், 50 ஏக்கர் என குறைந்த அளவு நிலம் வைத்துள்ளனர். இப்படி குறைவான நிலம் வைத்துள்ளவர்கள் நிலத்தில் தாங்களே நேரடியாக வேலை செய்வார்கள். தங்களுடன் பணிபுரிய தேவையான அளவு விவசாய பணியாளர்களை அழைத்துக் கொள்வார்கள்.

விவசாயி பணியாளர்களுக்கு அதிக சம்பளம் தரக்கூடாது என எந்த விவசாயும் இதுவரை நினைத்ததே இல்லை. விளை பொருட்களுக்கு விலை கிடைக்காதது, விளைச்சல் பொய்த்து போவது, நோய் தாக்குதல், சில நேரங்களில் விதைகளே முளைக்காமல் போவது, (அதாவது தரம் குறைந்த விதைகள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதால் ஏற்படும் பாதிப்பு), தரம் குறைந்த பூச்சி மருந்துகளால் ஏற்படும் பாதிப்பு, தண்ணீர் பற்றாக்குறை, சில நேரங்களில் வெள்ளத்தால் பேரழிவு, காற்று வீசுவதால் ஏற்படும் சேதம், வன விலங்குகளால் சேதம், திருடர்களால் விளை பொருட்கள் திருடப்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே தான் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். இதன் காரணமாக விவசாய பணியாளர்களுக்கு எந்த விவசாயி நினைத்தாலும் அதிக சம்பளம் தர முடியாது.

இதனை காங்கிரஸ் அரசு எப்படி புரிந்து கொண்டதோ தெரியவில்லை. விவசாய கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் தினக்கூலி வழங்க வேண்டும். இதற்காக கிராம நுாறு நாள் வேலை திட்டம் கொண்டு வருகிறோம் என கொண்டு வந்தனர். இந்த திட்டம் வந்த போது நாடு முழுவதும் தடபுடலாக வரவேற்பு இருந்தது. தமிழகத்தில் இந்த திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என மத்திய அரசு பல முறை தமிழக அரசுக்கு விருதெல்லாம் கொடுத்தது.

பின்னர் மெல்ல... மெல்ல... சூழல் மாறியது. எல்லா பணிகளையும் போல் இதிலும் ஊழல் புகுந்தது. கிராம நுாறு நாள் வேலை திட்டத்தில் எந்தெந்த வகைகளில் ஊழல் செய்ய முடியுமோ அத்தனை வகையிலும் ஊழல் செய்ய தொடங்கினர். பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் கை வைத்தனர். இதற்கு மாறாக அவர்கள் குறிப்பிட்ட பணி செய்ய வேண்டும் என்ற இலக்கு வாய் மொழியாக அகற்றப்பட்டது.

இப்போது உள்ள சூழலில் கிராம நுாறு நாள் வேலைக்கு ஆள் வந்தாலே போதும், சிறிது நேரம் வேலை செய்வது போல் போக்கு காட்டி விட்டு, பொழுதை போக்கி விட்டு சென்றாலே வங்கி கணக்கில் பணம் ஏறி விடும். அதாவது அதிகாரிகளின் கமிஷன் போக மீதப்பணம் ஏறி விடும். இல்லாவிடில் பணம் ஏறியதும் கமிஷனை எடுத்து கொடுத்து விட வேண்டும். இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற வகையில் நடைமுறைகள் உருவாக்கப்பட்டு விட்டன. இப்படித்தான் சிக்கல்களால் கிராம நுாறுநாள் வேலை திட்டம் முடங்கி உள்ளது.

அது மட்டும் முடங்கவி்ல்லை. விவசாயத்தையே முடக்கி விட்டது. பெரிய முதலாளிகள் இயந்திரங்களை வைத்து விவசாயம் செய்ய தொடங்கி விட்டனர். சிறிய விவசாயிகள் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கின்றனர். அதாவது நுாறு நாள் வேலை திட்டத்தில் பொழுது போக்கி விட்டோ, துாங்கி எழுந்து விட்டோ சம்பளம் வாங்கும் சூழல் உருவான நிலையில், வேலை செய்து விட்டு பணம் வாங்குவது சிரமம் தானே. எனவே கூலி வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டது.

விவசாயிகள் பலர் தோட்டக்கலை விவசாயத்தையே நிறுத்தி விட்டனர்: தங்கள் குடும்ப உறுப்பினர்களால் எந்த அளவு நிலத்தில் வேலை பார்க்க முடியுமோ அந்த நிலத்தில் மட்டும் விவசாயம் செய்து விட்டு... மீதம் உள்ள நிலத்தில் தென்னை, மா, பலா, கொய்யா என பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து விட்டனர். மரக்கன்றுகளை நட்டால், ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே வேலையிருக்கும்.

தோட்ட வேலை, வயல் வேலை என்றால் தினமும் வேலையிருக்கும். ஆட்கள் இல்லாத நிலையி்ல் என்ன செய்ய முடியும். எனவே மரங்களை நடவு செய்து வருகின்றனர். பல விவசாயிகள் தங்களின் நில மதிப்பு உயர்ந்து விட்டதால், ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விவசாய நிலங்களை விற்று விட்டனர். அந்த பணத்தை வட்டிக்கு கொடுத்து விட்டோ... அல்லது பாதுகாப்பான முறைகளில் முதலீடு செய்து விட்டோ ஹாயாக உள்ளனர். சிலர் வணிக நிறுவனங்கள் கட்ட கொடுத்து விட்டனர். இப்போது தான் ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி அத்தனை பேருக்கும் தெரியுமே. இதில் விளைநிலங்களை பிளாட்டுகளாக மாற்றுவதா சிரமம். எனவே பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறி விட்டன.

வருவாய்த்துறையோ, தோட்டக்கலைத்துறையோ, விவசாயத்துறையோ உண்மையான கணக்கினை அரசுக்கே சொல்வதில்லை. அப்படி உண்மையான கணக்கினை சொன்னால், தமிழகத்தில் விவசாயம் எந்த அளவு வீழ்ச்சி அடைந்து விட்டது என்ற உண்மை தெரியும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!