ரோட்டில் கிடந்த 10 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
பெரியகுளத்தில் நடந்த பாராட்டு விழாவில் சமூக நல்லிணக்க தலைவர் முகமது ஷபி, நகையை பத்திரமாக ஒப்படைத்த முதியவர் முத்துப்பாண்டி, தொழிலதிபர் வி.ஆர்.,ராஜன்.
தேனி மாவட்டம் பெரியகுளம் செட் பவுண்டேஷன், தேனி அறிவிச்சோலை படிப்பகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான சுதந்திரதின அமுதப் பெருவிழா கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடத்தினர். பொறியாளர் நித்தியானந்தம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமது ஷபி தொடக்க உரை நிகழ்த்தினார். தேனி வினோரா பவுண்டேஷன் தலைவர் பி.ஆர்.ராஜன் வாழ்த்தி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழும் பாராட்டுக்கேடயமும் வழங்கப்பட்டது. அப்போது கிழிந்த சட்டையோடு கைலி கட்டியிருந்த ஒரு பெரியவர் அழைத்துவரப்பட்டார். மேடையிலும் மேடைக்கு கீழ் உள்ளோர் அனைவர் பார்வையும் அவர் மீது குவிந்திருந்தது.
அப்போது அறிவிப்பாளர் "சமீபத்தில் பெரியகுளத்தில் ரோட்டில் கிடந்த 10 பவுன் நகையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தவர் நேர்மையாளர் முத்துப்பாண்டி தான் இவர்" என மேடையில் அறிவித்தனர், ரோட்டில் கண்டெடுத்த நகையை பத்திரமாக போலீசில் ஒப்படைத்த முதியவரா இவர் என அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் கரவொலி எழுப்பி, அவரை பாராட்டினர்.
வயோதிகமும் வறுமையும் சூழ்ந்த கடும் ஏழ்மையில் உழலும் இந்த மனிதரின் நேர்மையை அனைவரும் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முத்துப்பாண்டிக்கு மேடையில் வைத்து சால்வை அணிவித்து அவரை கௌரவித்தனர். வி.ஆர்., பவுண்டேசன் தலைவர் ராஜன் தன் மணிபர்சை திறந்து, அதிலிருந்த அத்தனை 500 ரூபாய் தாள்களையும் அப்படியே (எவ்வளவு என பார்க்காமல்) அந்த பெரியவரின் சட்டைப்பையில் வைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெரியவர், தன் நேர்மைக்கு கிடைத்த அந்த தொகையை கண்டு திகைத்தும் கலங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu