மதிப்பு மிகுந்த கிராமங்கள்.... ஜாக்பாட் அடித்த விவசாயிகள்....
பைல் படம்.
Theni News Today -மாநிலத்தின் மிகவும் சிறிய மாவட்டமாக உள்ளது தேனி. மதுரை மாவட்டத்தில் இணைந்து இருந்தபோது, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் பகுதியாக இருந்த பகுதிகளை மட்டும் பிரித்து 1996ல் தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனி அப்போது சிறிய நகராட்சியாக இருந்தது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும், தேனி மாவட்டத்தில் 70 சதவீத பகுதிகளுக்கு தேனியை கடந்தே செல்ல முடியும். அப்படி ஒரு நில அமைப்பு உள்ளது.
தேனி நகராட்சி அப்போது ஒரு பைபாஸ் சந்திப்பில் உருவானது. இந்த பைபாஸ் சந்திப்பு இன்று உச்சகட்ட மதிப்பு மிகுந்த பகுதியாக மாறிப்போனது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்து சில ஆண்டுகளுக்கு பின்னர் திரும்ப வந்து பார்த்தால், தான் வாழ்ந்த ஊர் இப்படி மாறிப்போனதா என ஆச்சர்யப்பட்டு போவார்கள்.
தேனியில் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு முழுமையாக மாறிப்போனது. தவிர திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலை, மதுரை- போடி அகல ரயில், தேனியின் புதிய பஸ்ஸ்டாண்ட் என வளர்ச்சிப்பணிகள் அதிக வேகமாக நடந்தன. தவிர தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பல பெரிய கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் தேனியில் தங்கள் வணிக நிறுவனங்களை திறந்துள்ளன. இதனால் சில ஆண்டுகளில் ஒட்டுமொத்த தேனியின் வடிவமே மாறிப்போனது. மிகுந்த வளர்ச்சி பெற்ற ஒரு நகராட்சியாக தேனி உருவெடுத்து விட்டது.
தற்போது ராமேஸ்வரம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை, தேனி நகருக்குள் மேம்பாலங்கள், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் அமைய உள்ள நியூட்ரினோ நுண்நோக்கு கூடத்தை இணைக்கும் ரோடு பணிகள் என அடுத்தடுத்து தேனி அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால் தேனியை சுற்றி உள்ள கிராமங்களின் மதிப்பு பல மடங்கு கூடி விட்டது.
க.விலக்கு, அரைப்படித்தேவன்பட்டி, குன்னுார், தேனி, வடபுதுப்பட்டி, அன்னஞ்சி, பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், கோடங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, வீரபாண்டி, அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்டி என சுற்றிலும் இருக்கும் பல கிராமங்களின் நில மதிப்பு சுமார் 10 முதல் 15 மடங்கு வரை உயர்ந்து விட்டது. சில இடங்களில் 20 முதல் 25 மடங்கு நில மதிப்பு உயர்ந்து விட்டது. இன்று தேனி பஸ்ஸ்டாண்டில் இருந்து சுமார் 10 கி.மீ., தள்ளி இடம் வாங்கி வீடு கட்டினால் ஒரு கோடி ரூபாய் மதிப்பீடு ஆகி விடும். கி.மீ., சுருங்க... சுருங்க... ஒவ்வொரு கி.மீ., துாரத்திற்கும் குறைந்தது 15 லட்சம் மதிப்பு அதிகரிக்கும். அந்த அளவு நிலத்தின் விலை கூடி விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இரண்டு முதல் ஐந்து ஏக்கர் நிலம் வைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையையே நகர்த்த முடியாமல் தவித்த பல விவசாயிகள் இன்று கோடீஸ்வரர்களாக மாறி உள்ளனர். நில மதிப்பு உயர்வால் விவசாயத்தை கை விட்டு ரியல் எஸ்டேட்டுக்கு விற்று விட்டனர். பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, இன்று கோடீஸ்வரன் என்ற அந்தஸ்த்துடன் வலம் வருகின்றனர். அதனை விட பெரும் நெருக்கடி எத்தனை லட்சம் கொட்டி கொடுத்தாலும் சில இடங்களில் நிலம் வாங்கவே முடியாத நிலை உருவாகி விட்டது. அதாவது விற்கவே கூடாது. எப்படியும் மதிப்பு கூட... கூட... விலை அதிகரிக்கும் என முக்கிய இடங்களை பல பெரும் புள்ளிகள் வாங்கி குவித்து விட்டனர்.
வீடற்றவர்களின் நிலையை நினைத்து பாருங்கள்; வீடு இல்லாமல் சில ஆயிரம் ரூபாய் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள் தேனியில் மட்டுமல்ல; தேனி மாவட்டத்திலேயே சொந்த வீடு கட்டுவது என்பது செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்பும் சாதனைக்கு ஒப்பானது. அந்த அளவு வீடு வாங்குவது என்பது ஏழைகளுக்கு எட்டாத விஷயமாக மாறி விட்டது. அதாவது சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதால் ஏற்பட்ட குழப்பம் இப்போது தேனியில் தென்படத்தொடங்கி உள்ளது. இது உண்மையான வளர்ச்சியா... அல்லது பல லட்சம் பேருக்கு சாதகம் இல்லாத வீழ்ச்சியா என்ற குழப்பமே இன்று பலரிடம் உள்ளது. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu