மீண்டு(ம்) வருகிறார் பாலமுருகன் தேனி அரசியலில் புதிய பரபரப்பு
தேனி நகர செயலாளர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நகராட்சிதலைவர் ரேணுப்பிரியாவின் கணவர் பாலமுருகன்.
தி.மு.க.,வின் தேனி நகர செயலாளராக இருந்தவர் பாலமுருகன். இவர் நகர செயலாளராக இருந்த போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 60 ஆண்டுகளாக இருந்து வந்த அ.தி.மு.க.வின் ஆளுமையை அடித்து வீழ்த்தி தி.மு.க.வை தேனி உள்ளாட்சி அமைப்பு அரியணையில் ஏற்றினார். இந்த நிலையில் காங். உள்ளே புகுந்து தேனி நகராட்சி தலைவருக்கான ஒதுக்கீட்டை தி.மு.க. கூட்டணியில் இருந்து தனது கட்சிக்கு பெற்றது.
இதனை அறிந்த ஒட்டு மொத்த தி.மு.க. வினரும் சோர்ந்து கிடந்த போது, அதிரடியாக பாலமுருகன் தனது மனைவி ரேணுப்பிரியாவை தி.மு..க சார்பில் களம் இறக்கி தலைவர் பதவியை வென்றார். இது பற்றி காங்., தி.மு.க., மேலிடத்தில் புகார் செய்தது. தி.மு.க. மேலிடம் கூட இல்லை. முதல்வர் ஸ்டாலினே நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பாலமுருகனுக்கு நெருக்கடி கொடுத்தார். தலைவர் பதவியை விட்டுத்தராவிட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும் என நேரடி எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் பாலமுருகன் சளைக்கவில்லை.
இந்த போராட்டத்தில் அவரது நகரச் செயலாளர் பதவி பறிபோனது. இருப்பினும் நகராட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில் தேனி மாவட்ட, திண்டுக்கல் மாவட்ட தி.மு.க., முக்கிய தலைவர்கள் இப்பிரச்னையில் தலையிட்டு, பாலமுருகன் பக்கம் இருக்கும் நியாயங்களை தி.மு.க. வின் மேலிடத்திற்கு புரிய வைத்தனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினிடமே பேசி பாலமுருகன் பக்கம் இருக்கும் நியாயத்தை புரியவைத்தனர். இதனால் மனம் இறங்கிய ஸ்டாலின், தேனி நகராட்சி தலைவராக ரேணுப்பிரியா தொடரட்டும் என சிக்னல் கொடுத்ததோடு, பாலமுருகனையும் கட்சியில் இணைக்க அனுமதித்தார். எனவே பாலமுருகன் மீண்டும் தி.மு.க.வில் இணைக்கப்பட்டார்.
இப்போது லோக்சபா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அ.தி.மு.க.,வின் கோட்டையான தேனி மாவட்டத்தை தி.மு.க., முழுமையாக கைப்பற்றி உள்ளது. இதனை தக்க வைக்க மீண்டும் வலுவான நபர்களை கட்சிப்பொறுப்புகளில் அமர்த்த திட்டமிட்டு தி.மு.க., காய்நகர்த்தி வருகிறது. இந்நிலையில் பாலமுருகன் கடந்து வந்த அரசியல் பயணத்தை பற்றியும், தேர்தல் களத்தில் அவரின் திட்டமிட்ட பணி நிகழ்வுகளையும் மேலிடம் முழுமையாக அறிந்துள்ளதால் வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க., அ.ம.முக.,வை எதிர்த்து தேர்தல் வேலை செய்ய பாலமுருகன் சரியான சாய்ஸ் என முடிவு செய்துள்ளது.
இதனால் தேனி மாவட்ட தி.மு.க., தலைமை பாலமுருகனை தேனி தி.மு.க., நகர செயலாளராக நியமிக்குமாறு கட்சி மேலிடத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: தேனி நகராட்சியை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து முதல் 16 வார்டுகளுக்கு பாலமுருகனை நகர செயலாளராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 17 வார்டுகளுக்கு தற்போது உள்ள நகர செயலாளர் நாராயணபாண்டியன் நீடிக்கும் வகையி்ல் மாற்றங்கள் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் தி.மு.க., மேலிடத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu