வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ராட்சத நிழற்குடை திறப்பு
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ராட்சத நிழற்குடை அமைத்த நட்டாத்தி நாடார் மருத்துவமனை குழுவினர் கலெக்டர் ஷஜீவனாவுடன் படம் எடுத்துக் கொண்டனர்.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, திவசம் கொடுப்பது உள்ளிட்ட பல கர்ம காரியங்களை பொதுமக்கள் பல நுாறு ஆண்டுகளாக செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் அமர்ந்து இந்த காரியங்களை செய்ய போதிய வசதிகள் இங்கு இல்லை. கொளுத்தும் வெயில், அல்லது கொட்டும் மழையில் நனைந்து கொண்டு தான் இந்த கர்ம காரியங்களை செய்து வந்தனர். அதுவும் தினமும் ஏராளமானோர் செய்வதால் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும்.
இங்கு பக்தர்கள் கர்மகாரியங்களை செய்ய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி தேனி நட்டாத்தி நாடார் உறவின்முறை மருத்துவமனை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் 150 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட ராட்சத நிழற்குடை அமைத்து கொடுத்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த நிழற்குடையினை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி எல்.எஸ்.ஸ்பின்னிங் மில் நிர்வாக இயக்குனர் எல்.எஸ்., பிரபாகரன் தலைமை வகித்தார். வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி முன்னிலை வகித்தார். தேனி நட்டாத்தி நாடார் உறவின்முறை செயலாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா கலந்து கொண்டு நிழற்குடையினை திறந்து வைத்தார்.
வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநாயினார், தி.மு.க., பிரமுகர் சசி, வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி, பொதுமக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக்பரீத் மற்றும் கார்த்திக், வீரபாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி நிறைவில் தேனி நட்டாத்தி நாடார் உறவின்முறை தலைவர் மாரீஸ்வரன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu