சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம் மஞ்சள்பை -முதல்வர் ஸ்டாலின்

சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம் மஞ்சள்பை -முதல்வர் ஸ்டாலின்
X

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "மீண்டும் மஞ்சப்பை" விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா 

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா தமிழக அரசின் சார்பில் நடைபெற்றது.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த துவக்க விழா நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையுரை ஆற்றினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

'மீண்டும் மஞ்சள் பை' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன். மஞ்சள் பை கொண்டு வந்தால், 'வீட்டில் ஏதாவது விசேசமா? பத்திரிகை கொண்டு வந்திருக்கிறீர்களா?' என்று கேட்ட காலம் ஒன்று உண்டு. அதன்பிறகு பிளாஸ்டிக் பை வந்து அதுதான் நாகரிகம் - மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் உருவானது.

மஞ்சள் பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள். சினிமாவிலும் - தொலைக்காட்சி தொடர்களிலும் கூட மஞ்சள் பையை கக்கத்தில் வைத்து ஒருவர் வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அழகான - விதவிதமான பைகளை ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தயாரித்து தங்களது போட்டிகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை வாங்குவதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது மக்கள் மத்தியிலும் குறைந்து விட்டது.

அந்த மஞ்சள் பைதான் சூழலுக்கு - சுற்றுச்சூழலுக்கு சரியானது - அழகான - நாகரிகமான - பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம் ஆகும்.

இன்றைய நாள் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ - அந்தளவுக்குச் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்பது மனிதகுலத்தை மீளாத துயரத்தில் ஆழ்த்துவது.

வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பிறந்தநாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பிரச்சனைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சனை என்பதை நான் வலியுறுத்திச் சொன்னேன்.

அந்த சுற்றுச்சூழலுக்கு மிகக் கேடு விளைவிப்பதுதான் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தாக வேண்டும். இப்போது இந்த மஞ்சள் பை இருக்கிறது. பருத்தி செடியில் இருந்து பஞ்சு கிடைக்கிறது. அதில் இருந்து பருத்தி நூலை துணியாக நெய்கிறோம். பை தைக்கிறோம். அந்த பை கிழிந்தது என்றால் அதனை கரித்துணியாக - மிதியடியாக வீட்டில் பயன்படுத்துகிறோம். அதுவும் சிக்கனத்துக்குப் பெயர்போன நமது பெண்கள் அதை முழுமையாக பயன்படுத்துவார்கள். அதன்பிறகு அது மக்கிவிடும். ஆனால், பிளாஸ்டிக் மக்காது. அதுதான் சுற்றுச் சூழலை கெடுக்கிறது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அதுதான் மண், நீர், காற்று என எல்லாவற்றையும் சீரழிக்கிறது. பிளாஸ்டிகை மண்ணில் போட்டால் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் கெடுகிறது. மண் கெட்டால் வேளாண்மை பாதிக்கிறது. கால்நடைகளும் இவற்றை தின்று இறந்து போகின்றன.

* நீர் நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

* நீர் மாசுபடக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

* ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கடல்சார் உயிரனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு மடிந்து போகின்றன.

* ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை எரிப்பதால் அதிலிருந்து டையாக்சின் வேதிப்பொருள் காற்றில் கலந்து, காற்று நஞ்சாகிறது!

* இதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நுரையீரல் பாதிப்புகள் எற்படுகின்றன.

இத்தனை பாதிப்புகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் நிறுத்தியாக வேண்டும். இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.

* ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது, ஓர் இடத்தில் சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, போக்குவரத்து மூலம் எடுத்துச்செல்வது. விற்பனை செய்வது ஆகியவை தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கும் தன்மையுள்ள இயற்கைக்கு உகந்த மாற்று பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* அரசு விதிகளை மீறி செயல்படுவோரின் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் அரசு செய்து வருகிறது.

* ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பல வகையிலும் விழிப்புனர்வு பிரச்சாரங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

* பேரங்காடிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களான இருக்கும் டாஸ்மாக் நிறுவனம், அறநிலையத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பசுமை குழுக்கள், தேசிய பசுமை படை என அனைவரையும் அழைத்து ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

* பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருநகரங்களில் மண்டல மாநாடு நடத்தப்பட்டது.

* வாகன கண்காட்சி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

சமூக வலைதளங்களில் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சிறு குறு நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கிட கடந்த 03.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 27-ஆம் தேதி அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். அகத்தூய்மை வாய்மைக்கு புறத்தூய்மை வாழ்வுக்கு !

அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, சுற்றுச்சூழலைக் காப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும். இயற்கையைக் காப்போம்! இயற்கையோடு இணைந்து, இயைந்து காப்போம்! இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்குக் முற்றுப்புள்ளி வைப்போம்! மஞ்சள் பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியமில்லை.

சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம் என்று தனது உரையில் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே. ஆர். பெரிய கருப்பன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வனத் துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்ட வாரியத்தின் தலைவர் உதயன், சென்னையிலுள்ள ஜெர்மனி நாட்டினுடைய துணைத் தூதர் காரின் கிறிஸ்டினா மரியா ஸ்டோல், மற்றும் வனத்துறை அதிகாரிகள், அரசுத் துறையை அதிகாரிள், வணிக அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள் மகளிர் சுய உதவினர், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!