பண்பாட்டு சிதைவாகப் பார்க்கப்படும் நெல்லை சம்பவம்

பண்பாட்டு சிதைவாகப் பார்க்கப்படும் நெல்லை சம்பவம்
X

பைல் படம்

நெல்லை மாவட்டத்தில் ஆண் வேடமிட்டு மருமகள் மாமியாரை கொலை செய்த விஷயம் பெரும் பண்பாட்டு சிதைவு என்ற கருத்து எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொள்ளையன் போல் வேடமிட்டு மாமியாரையே அடித்து கொன்ற மருமகளை காவல்துறையினர் மிக நுணுக்கமான சோதனையில் உண்மையினை கண்டறிந்து கைது செய்திருக்கின்றனர். அந்த மருமகள் மிக அழகான திட்டம் வகுத்திருக்கின்றாள். மாறுவேடத்தில் ஆண்போல் சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதில் நடந்த கொலை போல அதனை சித்தரிக்க முடிவு செய்திருக்கின்றாள்.

அப்படி அவள் ஆண் உடையில் வந்து ஹெல்மெட் எல்லாம் அணிந்து வீட்டுக்குள் சென்று மாமியாரை அடித்து கொன்று நகையினையும் பறித்திருக்கின்றாள். இதெல்லம் சிசிடிவியில் பதிவாகி விட்டது. ஒரு கொள்ளையன் வந்து செய்த கொலை போலே காட்சிகள் நம்ப வைக்கப்பட்டன‌. ஆனால் தமிழக காவல்துறை சாதாரணமானதா? கொள்ளையன் தப்பிச் சென்ற எந்த அடையாளமுமில்லை. அக்கம் பக்கம் சந்தேகமான நகர்வுகளுமில்லை. கொள்ளையன் வெளியே ஓடினாலும் ஊரை தாண்டி ஓடிய செய்தி இல்லை.

இதனால் நிதானமாக நோட்டமிட்டிருகின்றார்கள். இரு வகையில் அம்மணி வசமாக சிக்கியது. முதலில் அந்த ஆண் உடை கணவனுடையது என்பதை அறிந்திருக்கின்றார்கள். இரண்டாவது அம்மணியின் நடை உடை பாவனையும் சிசிடிவியில் இருக்கும் காட்சியும் சரியாக பொருந்தியிருக்கின்றது.

போதிய பயிற்சி இன்றி கொலை செய்த அம்மணி சிறைக்கு சென்று விட்டார். தமிழக காவல்துறை எப்படிப்பட்ட திறமையானது என்பது இப்போது விளங்கலாம். ஆனால் இப்படிபட்ட காவல்துறை ஏன் பல இடங்களில் தடுமாறுகின்றது என்றால் பல வழக்குகளில் அது திணறி திணறி தலைகுனிகின்றது என்றால் அந்த புலி அங்கெல்லாம் கை கால் வாய் எல்லாம் கட்டப்பட்டிருக்கின்றது என்பதன்றி வேறு பொருள் இல்லை.

மற்றொரு புறம் இந்த சம்பவத்தை வெறும் கொலையாக மட்டும் கருதி இதனை கடந்து செல்ல முடியவில்லை. மாமியார் மருமகள் சண்டை எக்காலமும் உண்டு. எந்த சண்டை என்றாலும் மாமியாருக்கு நலம் இல்லையென்றால் ஓடிவந்து உதவும் மருமகள் தான் நெல்லை பக்கம் இருந்தார்கள்.

என்னதான் சண்டை என்றாலும் ஒரு கட்டத்தில் இறங்கி செல்வார்கள், நெல்லை பெண்களின் இயல்பு அப்படி இருந்தது. அந்த மண்ணுக்கு எவ்வளவுக்கு வறட்டு பிடிவாதமும் வைராக்கியமும் உண்டோ அவ்வளவுக்கு பாசமும் உண்டு. ஆத்திரத்தில் அடித்துகொள்வார்களே தவிர பின் இருவருமே கட்டிதழுவி அழுதும் கொள்வார்கள். அப்படியெல்லாம் இருந்த தலைமுறை இப்பொழுது மாறிவிட்டது, அந்த மண்ணின் மக்கள் மனம் இப்படி மாறுவதெல்லாம் வேதனை.

காலணா வருமானமில்லை. புழுதிக்குள் வெயிலுக்குள் உழைத்தால்தான் அரைவயிற்றுக்கு கஞ்சி என்றிருந்த அந்த மக்களிடம் இருந்த அந்த பாசமும் மனமும் இப்போது லட்சங்களில் புரள்வோரிடம் இல்லை. அக்காலத்து பெண்களுக்கு டிவி தெரியாது, பத்திரிகை தெரியாது, ஜவுளிக்கடை, நகைகடை விதவிதமான கார்கள், நாகரீகம், மேல்நாட்டு சாப்பாட்டுகடை என எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் உழைப்பும் அன்பும் பாசமும் அது ஒன்று தான். இந்த நாகரீக கால பெண்களுக்கு எல்லாமும் தெரிகின்றது, ஏகப்பட்ட விஷயம் தெரிகின்றது.

ஆனால் அன்பும் பாசமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுமில்லை. கொஞ்சமுமில்லை. பாசமில்லா பெண்கள் வாசமில்லா மலர் என்பார்கள், தங்கத்திலே செய்தாலும் வாசமில்லா மலரால் ஆவதென்ன? காலம் வேகமாக மாறுகின்றது, அன்பும் கருணையும் பந்தமும் பாசமும் விடைபெற்று சென்று கொண்டிருக்கின்றன, கலிகாலத்தில் அதெல்லாம் சாத்தியம் என்றால் யாரால் தடுக்க முடியும்?. மகனை பெற்று வளர்த்து அவனுக்கு ஒரு மனைவி தேடி கொடுத்து அவ்வழியே தன் விதியினையும் முடிக்க அவளே வழிசெய்தாள் என்றால் அது வல்விதி என்பதை தவிர என்ன சொல்லமுடியும்?

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!