பரந்தூர் விமான நிலையம் 100 சதவீதம் அமைந்தே தீரும் என அமைச்சர் உறுதி

பரந்தூர் விமான நிலையம் 100 சதவீதம் அமைந்தே தீரும் என அமைச்சர் உறுதி
X

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

பரந்தூர் விமான நிலையம் 100 சதவீதம் அமைந்தே தீரும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் 100 சதவீதம் வந்தே தீரும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியதாவது:-

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் ஓடு பாதை நீட்டிப்பிற்காக நிலங்கள் கையவுப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதுவரை 186.31 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள நிலங்களும் விரைவாக கையகப்படுத்தப்படும்.

சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஊர் மட்டும் பிரச்சினையாக உள்ளது.அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அங்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மூன்று மடங்கு கூடுதலாக பணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஓரிரு நாட்களில் நடைபெறும் பணி அல்ல அவர்களிடம் சமரசம் பேசி அவர்களை திருப்திப்படுத்தி அதன் பிறகு தான் நிலங்களை கையகப்படுத்த முடியும். அவசர அவசரமாக நில எடுப்பு பணிகளை இந்த அரசாங்கம் செய்யவில்லை.

100 சதவீதம் கட்டாயம் பரந்தூர் விமான நிலையம் அமைந்தே தீரும். சென்னையின் வளர்ச்சிக்கு மட்டும் அல்ல தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியமான ஒன்றாக உள்ளது. மாநில வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்பதை முதல்வர் உணர்ந்துள்ளார். அங்குள்ள மக்களிடம் சமரச அடிப்படையில் பேசுவதற்கு அமைச்சர்கள் வேலு, அன்பரசன் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளை முதல்வரும் அமைச்சர் ஏ.வ.வேலுவும் செய்து வருகின்றனர்.

இரண்டு துறைகள் சேர்ந்துதான் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் மதுரை விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எந்த பிரச்சினையிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கக் கூடிய நிலைமை இல்லை. கிராமத்தில் சுடுகாட்டுக்கு ரோடு போடுவது என்றால் கூட பிரச்சினை உள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்களோடு கலந்து பேசி அதற்கு பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

மேலும் அவரிடம் பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் இரட்டை நிலை நீடிப்பது குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சிகளுக்கு பயப்படும் நிலையில் இந்த அரசாங்கம் இல்லை கரும்பு மக்களுக்காகவே கொடுக்கப்பட உள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுத்தான் கரும்புகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை எழுப்பத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்து கொண்டு இருந்தால் இந்த ஆட்சியை நடத்த முடியாது. எதிர்கட்சிகளுக்கு பயப்படும் முதலமைச்சர் நம் முதலமைச்சர் இல்லை என்றார்.

Tags

Next Story