நரிக்குறவர், இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்

நரிக்குறவர், இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்
X

பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (4.11.2021) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை ஆகியவற்றையும் வழங்கினார்.

முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 நபர்களுக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள், 6 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள், 88 நபர்களுக்கு இருளர் (ST) சாதி சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் (MBC) சாதிச் சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் நல வாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், சுயவேலை வாய்ப்பினை உருவாக்க செயற்கை முறை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்க 18 நபர்களுக்கு பயிற்சி ஆணைகள், முத்ரா திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் கடனுதவி, சிறுதொழில் செய்வதற்கான வங்கிக்கடன் திட்டத்தின் கீழ் 33 நபர்களுக்கு ரூ.10,000/ வீதம் 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனுதவி, 75 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்மொழிவு ஒப்புதல், மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் (MAPS) நிறுவனத்தின் மூலம் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆணை , என மொத்தம் 282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து பேசிய பயனாளிகள் பவானி மற்றும் அஸ்வினி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் தங்கள் இல்லங்களுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அவர்களது அழைப்பினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் நரிக்குறவர் மற்றும் இருளர் குடியிருப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, அவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மேலும், பூஞ்சேரி ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, முதலமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மரு.எம்.சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர் து. செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!