மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ரூ.85.22 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு
பைல் படம்.
மாநில நகர்ப்புர உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 6 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில், ஆற்றல்திறன் கொண்ட தெருவிளக்குகளை அமைக்கும் பணிகளுக்கு ரூ.85.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில நகர்ப்புர உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ஆற்றல்திறன் கொண்ட புதிய தெருவிளக்குகளை அமைக்கும் பணிக்காக 6 மாநகராட்சிகளுக்கு ரூ.64.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ், ஆவடி மாநகராட்சிக்கு ரூ.7.91 கோடி திட்ட மதிப்பீட்டில் 4,445 புதிய விளக்குகளும், கடலூர் மாநகராட்சிக்கு ரூ.1.88 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,287 புதிய விளக்குகளும், தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.6.48 கோடி திட்ட மதிப்பீட்டில் 3,634 புதிய விளக்குகளும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ரூ.19.34/- கோடி திட்ட மதிப்பீட்டில் 7,701 புதிய விளக்குகளும், மதுரை மாநகராட்சிக்கு ரூ.15.23 கோடி திட்ட மதிப்பீட்டில் 10,329 புதிய விளக்குகளும் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு ரூ.13.97/- கோடி திட்ட மதிப்பீட்டில் 6,264 புதிய விளக்குகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 10 நகராட்சிகளில் வழக்கமான தெருவிளக்குகளை ஆற்றல்திறன் கொண்ட விளக்குகளாக மாற்றியமைக்கும் பணிக்காக ரூ.20.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ், திருநின்றவூர் நகராட்சிக்கு ரூ.2.95 கோடி திட்ட மதிப்பீட்டில் 3,297 ஆற்றல் திறன் கொண்ட விளக்குகளும், வடலூர் நகராட்சிக்கு ரூ.3.05 கோடி திட்ட மதிப்பீட்டில் 2,809 விளக்குகளும், இடங்கணசாலை நகராட்சிக்கு ரூ.2.62 கோடி திட்ட மதிப்பீட்டில் 839 விளக்குகளும், தாரமங்கலம் நகராட்சிக்கு ரூ.1.79 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,477 விளக்குகளும், இலால்குடி நகராட்சிக்கு ரூ.1.27 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,871 விளக்குகளும், முசிறி நகராட்சிக்கு ரூ.0.84 கோடி திட்ட மதிப்பீட்டில் 821 விளக்குகளும், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு ரூ.3.01 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,914 விளக்குகளும், காரமடை நகராட்சிக்கு ரூ.1.06 கோடி திட்ட மதிப்பீட்டில் 2,097 விளக்குகளும், கோயம்புத்தூர் மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு ரூ.1.35 கோடி திட்ட மதிப்பீட்டில் 935 விளக்குகளும், களக்காடு நகராட்சிக்கு ரூ.2.47 கோடி திட்ட மதிப்பீட்டில் 1,644 விளக்குகளும், ஆற்றல் திறன் கொண்ட விளக்குகளாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 33,660 புதிய ஆற்றல் திறன்கொண்ட விளக்குகள் அமைக்கப்படவும் மற்றும் 17,704 வழக்கமான தெரு விளக்குகள், ஆற்றல் திறன் கொண்ட தெரு விளக்குகளாக மாற்றியமைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் திறன்கொண்ட விளக்குகளின் மின் நுகர்வு, வழக்கமான விளக்குகளுடன் ஒப்பிடும்போது 40 விழுக்காடு வரை குறைவாக இருக்கும். 17,704 வழக்கமான தெருவிளக்குகளை ஆற்றல் திறன் கொண்ட விளக்குகளாக மாற்றுவதன் மூலம் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.4.29 கோடி நிதி சேமிப்பு இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மாநில நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், 6 மாநகராட்சிகளுக்கு ரூ.64.81 கோடி திட்ட மதிப்பீட்டில் 33,660 ஆற்றல்திறன் கொண்ட புதிய விளக்குகள் அமைக்கும் பணிகளுக்கும் மற்றும் 10 நகராட்சிகளுக்கு ரூ.20.41 கோடி திட்ட மதிப்பீட்டில் 17,704 ஆற்றல்திறன் கொண்ட விளக்குகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கும், மொத்தம் ரூ.85.22 கோடி நிதியினை வழங்கி தமிழக முதல்வரால் உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu