குட்கா முறைகேடு வழக்கு: மார்ச் 20 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு..

குட்கா முறைகேடு வழக்கு: மார்ச் 20 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு..
X

மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) அலுவலகம். (கோப்பு படம்).

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு விற்பனை, கிடங்குகளில் பதுக்கி வைத்ல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கபட்டது. இருப்பினும், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யபட்ட குட்கா பொருள்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

அந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தததாம். அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பழனி, செந்தில்வேலவன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டன.

இந்த நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர், சிபிஐ வழக்கு பதிவு செய்து கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016 ஆண்டு கைது செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் ரமணா, விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்ட மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேர்க்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த தவறுகளை திருத்தம் செய்தும், வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் தொடர்பான குறித்த விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சிபிஐ தாக்கல் செய்திருந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் திரும்ப அளித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என்றும் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கபட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு நீதிபதி மலர் வாலண்டினா தள்ளிவைத்தார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself