ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது: உயர்நீதிமன்றம்

ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது: உயர்நீதிமன்றம்
X
"ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது; நில அபகரிப்புகள் நடக்கிறது, நீர் நிலைகள் மாயமாகிறது." என்றும் தனது அதிருப்தியைத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.70,060 கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷணன் தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2019ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், சர்ச்சைக்குரிய கோபாலகிருஷணன் செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமிப்பதாக அறிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கருப்பு எழுத்து கழகம் எனும் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படுகிறதா? கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை கையாண்டுள்ளது? என்று சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், இது குறித்த விவரங்களை மூன்று வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மட்டுமல்லாது, "ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது; நில அபகரிப்புகள் நடக்கிறது, நீர் நிலைகள் மாயமாகிறது." என்றும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!