ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!

ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்!  இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
X
வெள்ளையர்கள் நம் நாட்டின் வளங்களை கொள்ளையடித்தார்கள். ஆனால் அழிக்கவில்லை.

இது குறித்து தற்போது சமூக வலைதளங்களி்ல டிரென்ட் ஆகும் ஒரு பதிவு. நம் வாசகர்களுக்காக.

எவ்வளவு அட்டூழியம் அராஜகம் இருந்தாலும் வெள்ளையர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய நம் அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை.

வெள்ளையர்கள் ஆண்ட காலம். திருநெல்வேலிக்கு அருகே ரயில்பாதை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்காக நிறைய பனைமரங்களை வெட்டவேண்டிய சூழல். அங்கு பனையை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆங்கிலேயர்களிடம் சென்று பனையை வெட்டுவதை தடுக்கும் தைரியமில்லை. அதே நேரத்தில் பனைமரங்களை இழக்க மனமும் இல்லை.

உச்சிவெயல் மண்டையை பிளக்க பசியோடு ஆங்கிலேய அதிகாரிகள் இருந்த நேரம்பார்த்து அங்கிருந்த மக்கள் மண்பானையில் கொண்டு வந்த ஒரு உணவுப்பொருளை அவர்களிடம் வழங்க ருசித்து சாப்பிட்டு வாழ்த்திச் சென்றனர்.

மறுநாள் ரயில் பாதை அமைக்கும் இடத்துக்கு வந்த வெள்ளைய அதிகாரிகள், "நேற்று சாப்பிட ஏதோ கொடுத்தீர்களே! என்ன அது? மிகவும் ருசியாக இருந்தது. நீண்ட நேரம் பசியெடுக்கவில்லை. மிகவும் இதமான உணவதை எப்படி தயாரித்தீர்கள்". என கேட்க, அந்த மக்கள் கைகளைகாட்டிய இடம் பனைமர உச்சி.

அவர்கள் நம்ப மறுக்க, பனையில் இருந்து இளம்பனை நுங்கோடு பதநீர் கலந்து, பனைவெல்லம் சேர்த்து மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து கொடுக்க நேற்று சாப்பிட்ட அதே ருசி. "வாவ்" என வாயை பிளந்த அதிகாரிகள் பனைமரங்களை வெட்டாமல் மாற்றுப்பாதையில் ரயில்பாதை அமைக்க உத்தரவிட்டனர். நுங்கு சீசன் முடியும்வரை அவர்களுக்கு மக்கள் தயாரித்தளித்த பனை உணவே மதிய உணவானது. மக்களின் சாதுர்யத்தால் பெரிய அளவில் பனைமரங்கள் வெட்டுவது தவிர்க்கப்பட்டது.

வெள்ளையர்களிடமிருந்து பனைமரங்களை காத்த நம்மால் இன்று ஆளும்வர்க்கம் சாலை விரிவாக்கம் என்றப் பெயரிலும், அறியா மக்கள் பனை எதற்கு என்று முடிவெடுத்து அதை அழிக்கும் முடிவிலிருந்தும் காக்க முடியவில்லை.

பனை என்றதும் இன்றைய தலைமுறைக்கு நினைவில் வருவது நுங்கு. வியர்குருக்கு மருந்தான நுங்கை ருசியான பாயசம் வைத்தும் அசத்த முடியும். நுங்கு எடுத்து சாப்பிட்டபின் காயைக் கொண்டு தயாரித்த வண்டி உருவாக்கி விளையாடிய அனுபவம் முன் தலைமுறையோடு பறிபோனது. முற்றிய நிலையில் உள்ள பனம்பழத்தை பறித்து சீவி, அவித்து சாப்பிட்ட ருசி, விழுந்த பழத்தை சுட்டு சாப்பிட்ட ருசி, இன்னும் நாவிலிருந்து அகலவில்லை.

அன்றைய கிராமத்து வாழ்க்கையில் பனம்பழம் விழும் காலங்களில் எங்கள் முதல் வேலை பனம்பழம் பொறுக்குவது. பொறுக்கிவந்த பழங்களை ஒரு இடத்தில் குவித்து வைத்திருப்போம். சில வாரங்களில் நன்கு பழுத்து அந்த பகுதியில் செல்லும் போது வாசம் வரும் பக்குவத்தில் அதை தனித்தனி விதைகளாக பிரித்து உலரவிடுவோம்.

விதைகள் உலரும் அதே நேரத்தில் பனங்கிழங்கு விளைய வைக்க இடத்தை தயார் செய்வோம். இரண்டடி ஆழத்திற்கு மண்ணை புரட்டி சாம்பல் மக்கிய உரங்கள் கலந்து நடுமிடத்தை மட்டமாக்கி, உலர்ந்த விதையின் தலைப்பகுதி மேலிருக்குமாறு அடுக்கி மேலே சிறிது மணல் தூவிவிட்டோமென்றால் போதும் 115 லிருந்து 130 நாட்களுக்குள் பனங்கிழங்கு தயாராகி விடும்.

அவித்து உண்பதாகட்டும், சுட்டு சாப்பிடுவதாகட்டும் அவ்வளவு ருசி. அதுவும் இரவு படுக்கச் செல்லும்போது, விறகடுப்பு நெருப்பில் புதைத்து வைத்து காலையில் எடுக்கும் பனங்கிழங்கை இலேசாக வளைத்தால் சுருக்கம் சுருக்கமாக வந்தால் அது சரியாக வெந்திருக்கிறது என்பதை உணர்த்தும்.

சுட்ட பனங்கிழங்கை துருவி அதோடு அப்போது பறித்த தேங்காயின் துருவலை சேர்த்து சாப்பிட்டா..! அடடா பாழாய்போன பணத்தை தேடி நகரத்துக்கு வந்ததால் இழந்தவை தான் எத்தனை.!

பனங்கிழங்கை சனி மாலை அறுவடைசெய்து அரையடி நீளத்துக்கு வேரைவிட்டு நறுக்கி விதைகளை நீக்கி தலைப்பு மாற்றி நூறு கிழங்குகளாக கட்டி மறுநாள் ஞாயிறு சந்தைக்கு எடுத்துச்சென்று விற்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவருவோம்.

சரியாக கிழங்கு வராத சிறு விழுதுமட்டும் வந்த விதையை குறுக்காக வெட்டினால் உள்ளிருக்கும் பனம்பூவின் ருசிக்கு பனைமரத்தையே எழுதிவெக்கலாம். பனங்கிழங்கு அறுவடை செய்தபின் கிடைக்கும் விதைக்குடுகை அற்புதமான விறகு.

பொங்கலுக்கு இருவாரங்களுக்கு முன்னே பனங்குருத்தை வெட்டி, சரியான அளவில் வகுந்து, பனியிலும் வெயிலிலும் பதப்படுத்தி முட்டுமாலை, நெத்திச்சுட்டி, அரிசிமாலை எனச்செய்து மண்பானை ஓட்டில் சாயம் காய்ச்சி, அதில் பனம் ஓலையில் செய்தபொருட்களை முக்கி, சாயமேற்றி மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு அணிவித்து மகிழ்வோம்.

• பனை ஓலை காத்தாடி,

• பனை ஓலை கொழுக்கட்டை,

• பனை ஓலை பாய்,

• பனை ஓலை பெட்டி,

• பனை ஓலை கூடை,

• பனை ஓலை குச்சிபெட்டி,

• அபூர்வமாய் இருந்த ஒரே மாதுளைச்செடியில் காய்களை அணில் கடிக்காமல் இருக்க அப்பா செய்து கட்டிவிடும் பனை ஓலை பெட்டி,

• அக்கினி நட்சத்திரத்தன்று வெட்டி, அழகாய் அடுக்கி, பதப்படுத்திய பனை மட்டையில் வெய்த வீட்டில் கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் கதகதப்பையும் உணர்ந்த அனுபவம்,

• அப்பப்பா பனைஓலையில்தான் எத்தனை பரவசம்.

• பதநீர் குடிக்கவும், சாப்பிடவும் பயன்பட்ட பச்சை பனை ஓலை குடலை.

• கால்சியம் நிறைந்த ருசியான பதநீர், அதில் காய்ச்சி எடுத்த நலம்பயக்கும் பனைவெல்லம். பதப்படுத்திய மருத்துவ குணம் கொண்ட பனங்கற்கண்டு.

• வீடுகட்ட வாரை, விறகாக மட்டை, மிதியடிசெய்ய சப்பை (ஒரு காலத்தில் கீழ் தஞ்சையில் பலகுடும்பங்கள் பனைமட்டை நார் தயாரித்து கேரளாவுக்கு அனுப்பி அந்த நார் மிதியடியாக தமிழ்நாடு திரும்பும்).

• காய்கறி பந்தல் போட நார்.

• வீடுகட்டவும், கட்டில் தயாரிக்கவும் பயன்படும் அகனி.

• முக்கியமாக உடலுக்கு நல்லதா? கெடுதலா? என விவாதத்தில் இருக்கும் கள்ளு.

• ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்ட பனையிலிருந்து தயாரிக்கும் பனை வெல்லத்தோடு ஒப்பிடுகையில் அதே பரப்பில் பயிரிடும் கரும்பிலிருந்து கிடைக்கும் வெல்லத்தின் மதிப்பீடு குறைவு.

• ஒருமுறைவிதைத்தால் பத்து ஆண்டுகளில் இருந்து ஒரு நூற்றாண்டு வரை பயன்தரக்கூடியது பனை.

• மழைநீரை பூமிக்கடியில் சேகரித்து வெளியே விடாமல் பராமரிப்பது பனை.

• தன்னிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களால் மனித வாழ்வை தன்னிறைவாக்கும் பனை. பனையின் பயன்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!