கடவுள்களின் முகம் காட்டிய ஓவியர்..!

கடவுள்களின் முகம் காட்டிய ஓவியர்..!
X

கோவில்பட்டி கொண்டையா ராஜு  வரைந்த விநாயகர் (கோப்பு படம்)

படத்தில் இருப்பது யார் எனக் கேட்டால்... இது கடவுள் லட்சுமி என்று மின்னல் வேகத்தில் பதில்கள் பாய்ந்து வரும்.

இப்படித் தான் கடவுள் லட்சுமி இருப்பார் என வரையறை செய்தவர்கள் யார்?அவர்களுக்கு எப்படி தெரியும்?

லட்சுமி மட்டுமல்ல நாம் தினமும் காலண்டரில் பார்க்கும், வீட்டு பூஜை அறைகளில் வைத்து வழிபடும் சரஸ்வதி, முருகன், சிவன், விநாயகர்... என சகலவிதமான இந்துக் கடவுள்களுக்கு பொருத்தமான உருவங்களைத் தந்து அவர்களை உலகறியச் செய்தவர், கோவில்பட்டி சி.கொண்டயராஜூ என்ற ஓவியர் தான்.

ஓவிய மாமேதை கொண்டயராஜூ 1898 ல் சென்னை மைலாப்பூரில் பிறந்தார். இவரது தந்தை குப்புசாமி ராஜூ ஒரு தலைசிறந்த சித்த மருத்துவர். ஆனாலும் தன் மகனை சித்த மருத்துவத் துறைக்கு இழுக்காமல், மகன் விரும்பிய பாரம்பரிய ஓவியக் கலையை கற்க வைத்தார். ஆரம்ப நாட்களில் சென்னையில் முருகேசநாயக்கர், சுப்பா நாயுடு போன்ற தலை சிறந்த ஓவியர்களிடம் ஓவியக் கலை கற்ற கொண்டயராஜூ, 1916ல் சென்னை மாகாண கலைக் கல்லூரியில் சேர்ந்தார். 1918 ல் முதல் மாணவராகத் தேறினார்.


ஓவியக் கலைஞராக அவரது கலைப் பயணம்,பழனியப்பா பிள்ளை என்பவர் நடத்திய "ஸ்ரீ தத்துவ மீனலோசனி பால சற்குண சபா" என்ற நாடக நிறுவனத்தில் தொடங்கியது.அந்த குழு நடத்திய நாடகங்களுக்கு பின்னனி வரைந்து தரும் பணியை செய்து வந்தார். அந்த நாடகக் குழு பல்வேறு காரணங்களால் 1942ல் கோவில்பட்டியில் கலைந்தது. அந்த இடத்தில் கொண்டயராஜூவுக்கு இயற்கை வேறு பாதையை உருவாக்கியது.

தன்னை நம்பி தன்னுடனே இருந்து பணி செய்து வந்தவர்களுக்காக,"தேவி ஆர்ட் ஸ்டூடியோ" என்ற கலைக் கூடத்தை கொண்டயராஜூ கோவில்பட்டியில் உருவாக்கினார்.

அதே கால கட்டத்தில் தான் கோவில்பட்டியில் இருந்து இருபத்தைந்து கிமீ தொலைவில் இருந்த சிவகாசியில் "லித்தோ" எனும் பிரிண்டிங் பிரஸ்கள் உருவாகத் தொடங்கி இருந்தன. லித்தோ அச்சுக் கூடங்களில் காலண்டர்கள், பூஜைக்கான படங்கள், வியாபாரப் பொருட்களுக்கான ரேப்பர்கள் என சகல விதமான படங்களுக்கான தேவைகளும் சூடு பிடிக்கத் தொடங்கி இருந்தன. அவர்கள் அனைவரும் கொண்டயராஜூவைத்தான் தான் தேடி வந்தனர்.

கொண்டயராஜூவும் அவரது சீடர்களான டி.எஸ்.சுப்பையா, மு.ராமலிங்கம், டி.எஸ்.அருணாச்சலம் போன்றவர்களும், இவர்களுக்கு சீடர்களாக இருந்தவர்களும் வரைந்து தந்தவை தான் இன்றைக்கும் பயன்பாட்டில் இருக்கும் கடவுள் உருவங்கள்.

கொண்டயராஜூ என்ற ஓவியர் வரைந்து தரும் முன்னர் தமிழ்நாட்டு வீடுகளில் பூஜை அறைகளில் கடவுள்களின் படங்கள் இல்லை,ஓவியங்கள் இல்லை. மிக அரிதாக மிகப் பெரிய செல்வந்தர்கள் இல்லங்களில் மட்டும் கேரளத்தின் ராஜாரவிவர்மா வரைந்த கடவுள் ஓவியங்கள் இருந்தன. சில வீடுகளில் தஞ்சாவூர் ஓவியங்கள் இருந்தன.

என்றைக்கு சிவகாசியில் லித்தோ அச்சுக் கூடங்கள் துளிர் விட்டு பெருகத் தொடங்கியதோ, அன்றிலிருந்து தான், கொண்டயராஜூ போன்ற ஓவியர்கள் கைவண்ணத்தில், காலெண்டர் வடிவில், சாமானியர்கள் வீடுகளுக்கு உள்ளும் கடவுள் படங்கள், உருவங்கள் வந்தன. ஒரு சிலரால் மட்டுமே பார்க்க முடிந்த கடவுள் உருவங்களை, சகலருக்குமாக மாற்றியவர் ஓவியர் கொண்டயராஜூ தான். அந்த வகையில் அதை ஒரு மாபெரும் புரட்சி என்றே கூட சொல்லாம். இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் கலைக்காவே அர்ப்பணிக்கப்பட்ட அவரது கலை வாழ்வு, 1976ல் அவர் இயற்கையுடன் இணையும் வரையிலும் செம்மையாகத் தொடர்ந்து செய்தார்.

ஓவிய மேதை கொண்டயராஜூ வரைந்த பின்னர் தான் லட்சுமி என்றால் வெளிர் சிகப்பு நிற சேலையில், இளஞ்சிவப்பு நிற தாமரை மலர் மீது நின்றபடி இருப்பார். வெள்ளைத் தாமரை மலர் மீது வெள்ளை நிற சேலையில் கையில் வீணையுடன் அமர்ந்தபடி இருந்தால் அது சரஸ்வதி. பச்சைப் புடவையில் இருந்தால் அது மீனாட்சி. வேலுடன் அழகிய முகமாக இருந்தால் அது முருகன்...என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய வந்தது என்பது வரலாறு... எவ்வளவு அற்புதமான தகவல் பாருங்கள்....

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!