விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்ப இடுபொருள் உற்பத்தி பயிற்சி

விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்ப இடுபொருள் உற்பத்தி பயிற்சி
X

விவசாய குழுவின் முன்னோடி விவசாயி ராஜகிருஷ்ணன் தோப்பில் இரண்டாம் கட்ட இடுபொருள் உற்பத்திபயிற்சி நடைபெற்றது.

அத்திவெட்டியில் விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்ப இடுபொருள் உற்பத்தி பயிற்சி 2ம் கட்டமாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அடுத்த அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவினர் 26 பேர் சேர்ந்து பரம்பராகட் கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தை மட்டும் பின்பற்றி விஷமுள்ள நிலங்களையும் வசமாக்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான இரண்டாம் கட்ட இடுபொருள் உற்பத்தி பயிற்சி விவசாய குழுவின் முன்னோடி விவசாயி ராஜகிருஷ்ணன் தோப்பில் நடைபெற்றது.

விஷமுள்ள நிலங்களை வசமாக முதலில் மண்ணில் உள்ள விஷமானது நீக்கப்பட வேண்டும். அதற்கு பல தானிய சாகுபடி முறைகள் மற்றும் அமுத கரைசல் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி போன்றவைகளை எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும். எப்பொழுது பயன்படுத்த வேண்டும் இந்த இயற்கை இடுபொருள்கள் எவ்வாறு குறைந்த செலவில் நிலத்தை இயற்கையாக வசப்படுத்துவதோடு அதிகமாக மகசூலையும் பெற்று தரும் என்பதை தென்னை இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவ மூர்த்தி மற்றும் ஜீவாமிர்தம் தயாரிப்பு பற்றி பழனி துரை, மூலிகை பூச்சி விரட்டி பற்றி பொருளாளர் பாலசுப்ரமணியம் மீன்அமினோ அமிலம் தயாரிப்பு பற்றி ரமேஷ் செயல் விளக்கமாக செய்து காட்டினர்.

மதுக்கூர் வட்டார முன்னோடி இயற்கை விவசாய பயிற்றுநர் ராமாம்பாள்புரம் கணேசன் சொட்டு நீர் பாசனமும் இயற்கை விவசாயமும் என்ற தலைப்பில் மிக சிறப்பாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

மேலும் அவர் பயன்படுத்தும் ஏழு புண்ணாக்கு கரைசல் ஜீவாமிர்த கரைசல் மற்றும் மீன் அமினோ அமிலம் பயன்படுத்தி குருத்து அழுகல்நோயினை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்றவைகள் பற்றி எடுத்துக் கூறி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இயற்கை விவசாயம் செய்வதற்கு முடிவு செய்துவிட்டால் நிலம் முழுவதும் உள்ள விஷமானது வெளியேற்றப்பட வேண்டும் . அதற்கு உளுந்து, பசுந்தாளுர விதைகள் எண்ணெய் வித்து போன்றவற்றை கலந்து தென்னந்தோப்பில் தெளித்து 35 வது நாள் பூக்கும் போது நிலத்தில் மடக்கி உழுது விட வேண்டும். இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப இவ்வாறு செய்வதன் மூலம் வயலின் கரிமச்சத்து அதிகரித்து நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இயற்கை விவசாயிகளுக்கான மிக எளிய தொழில் நுட்பமான அமுதக் கரைசலை தயாரித்து ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் தேவைக்கேற்ப நீர்ப்பாசனத்தின் உடனோ அல்லது நேரடியாக தெளிப்பதன் மூலமோ மாதம் ஒருமுறை செய்து வருவதால் விஷமும் வெளியேறும் நிலமும் வசமாகும் என வைரவ மூர்த்தி தெரிவித்தார். மேலும் தென்னையை சுற்றி கற்றாழைகளை நடுவதன் மூலம் தென்னை வறட்சி தாங்கி வளரும்.தென்னை இளம் கன்றுகளை சுற்றி பசுந்தாள் உர விதைகளை தூவி இயற்கையான பாதுகாப்பு அளிக்க முடியும். அனைத்து தென்னந்தோப்புகளும்

இயற்கை விவசாயத்துக்கு மாறும்பொழுது உயிர்வேலி அமைப்பது மிக அவசியமாகும்.தென்னந்தோப்புக்கு பயன்படுத்தும் உள்வரும் மற்றும் வெளியேறும் இடுபொருள்கள் அனைத்தும் இயற்கை சார்ந்த தயாரிப்பா என்பதை உறுதிப்படுத்தி பயன்படுத்திட அங்கக சான்று வேளாண் அலுவலர் சங்கீதா கேட்டுக்கொண்டார்.

அட்மா திட்ட அலுவலர் சுகிர்தா பாரம்பரிய தென்னை விவசாயிகள் தங்கள் இடுபொருட்களை இ.நாம் எனும் செயலியில் பதிவு செய்து வேளாண் விற்பனை துறை மூலம் மிக எளிதாக விற்பனை செய்யும் முறை பற்றி எடுத்துக் கூறினார்.

வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் விவசாயிகளுக்கு அமுத கரைசல் ஜீவாமிர்தம் மூலிகை பூச்சி விரட்டி மற்றும் மீன் அமினோ அமிலம் தயாரிப்பு பற்றி உடனிருந்து செயல் விளக்கமாக செய்து காட்டினார். கொச்சின் போர்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் மண்புழு உரதொட்டி அமைத்தால் 40 அடி நீளம் 3 அடி அகலம் மூன்றடி உயரம் உள்ள கூரையுடன் கூடிய தொட்டிக்கு அரசு மானியம் ரூபாய் நாற்பதாயிரம் கிடைப்பது பற்றி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

மேலும் அமுத கரைசல் பூச்சி விரட்டி மீன் அமினோ அமிலம் தயாரித்துள்ள வைரவ மூர்த்தி பாலசுப்ரமணியன் ராஜகிருஷ்ணன் ரமேஷ்மற்றும் மணிமுத்து ஆகிய விவசாயிகளின் தென்னந்தோப்பினை வேளாண் உதவி இயக்குனர் வேளாண் அலுவலர் சங்கீதா மற்றும் வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் மற்றும் முன்னோடி இயற்கை விவசாய பயிற்றுனர் கணேசன் உள்ளிட்டோர் நேரடியாக பார்வையிட்டனர். பயிற்சி முடிவில் அனைத்து உறுப்பினர்களிடமிருந்து தண்ணீர் மாதிரியை சிசி திட்டஅலுவலர்கள் இளமாறன் மற்றும் கீர்த்தி வாசன் ஆகியோர் சேகரித்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் வடிவேல் மூர்த்தி மற்றும் பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியினை தலைவர் வைரவ மூர்த்தி ஒருங்கிணைத்தார். அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவரும் குழு உறுப்பினருமான ராஜ்குமார் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு