பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள விவசாயிகளுக்கு பயிற்சி
மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
இதில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறை பாதுகாப்பு உடை அணிந்து தெளித்தல் பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளின் தன்மைக்கேற்ப கையாளும் முறைகள் அதன் முக்கியத்துவம் பற்றியும், பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மைக்கேற்ப பச்சை மஞ்சள் மற்றும் சிவப்பு முக்கோணங்கள் பாட்டில்களில் குறித்திருப்பது பற்றியும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி விளக்கி கூறினார்.
மேலும் வயலில் மருந்தடிக்கும் நபர் அவசியம் கையுறை அணிந்திருக்க வேண்டும். முகத்தில் பூச்சி மருந்து படுவதை தவிர்க்க பைபர் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். காற்றடிக்கும் திசையில் பூச்சி மருந்து அடிக்க வேண்டும். வேளாண்துறை மூலமும் தொழில்நுட்ப அலுவலர்களாலும் பரிந்துரைக்கப்படும் அளவில் மட்டுமே மருந்துகளை பயன்படுத்த வேண்டும். உடனடியாக கட்டுப்படுத்துவதாக நினைத்து அதிக அளவில் மருந்துகளை பயன்படுத்துவது நீர், காற்று, மண் ஆகியவற்றின் சூழலை கெடுப்பதோடு பயிரிலும் நச்சுத்தன்மை அதிக அளவில் சேர வாய்ப்புள்ளது.
எனவே, விளைபொருட்களிலும் பயன்படுத்தும் வைக்கோலிலும் நச்சின் தன்மையை அதிகரிப்பதோடு மனிதர்களுக்கும் உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். மருந்து தெளித்த பின் தெளித்தவர் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். பயன்படுத்திய கலன்களையும் தூய்மை செய்து, பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் மீதம் இருப்பின் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
வேளாண்மை உதவி அலுவலர்கள் கார்த்தி மற்றும் தினேஷ் தென்னங்கன்றை நடவு செய்தல் மற்றும் வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப அலுவலர் ராஜு பயிற்சியை ஒருங்கிணைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu