நிலத்தில் உழவு செய்யாமல் மாற்றுப்பயிர்கள் விதைக்கும் கருவி செயல்விளக்கம்
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை மத்திய வேளாண்மை பொறியியல் நிலையம் ஆகியவை இணைந்து நிலத்தில் உழவு செய்யாமல் மாற்றுப்பயிர்கள் விதைக்கும் கருவி குறித்த செயல்விளக்கத்தை முதன்முறையாக ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் அம்பேத்கர் தலைமை வகித்து இந்த கருவியின் முக்கியத்துவத்தையும், உடனடி தேவையையும் எடுத்துக்கூறினார்.தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் பேசும்போது, தமிழ்நாட்டில் பயறு உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதாகவும் இதனை பூர்த்தி செய்ய கூடுதலான பரப்பில் பயறு விதைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் பேசும்போது, நெல் அறுவடை முடிந்த உடனேயே காலத்தோடு விதைப்பதற்கு இந்த கருவி மிகவும் பயன் தரும் எனவும், இந்த பகுதி மண்ணுக்கும், தட்ப வெப்பத்திற்கும் ஏற்றவாறு கருவியின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.நாகை உதவி வேளாண் இயக்குனர் பி.சிவக்குமார், வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் கான், வேளாண் உதவி இயக்குனர் கவிதா, தோட்டக்கலை உதவி இயக்குனர் திருசெல்வன் ஆகியோரும் பேசினர்.
இந்த கருவியில் ஒன்பது வரிசையில் நெல் அறுவடை முடிந்தவுடனேயே மண் ஈரம் காயும் முன்பே நிலத்தை உழவு செய்யாமல் மண்ணின் ஈரத்தைக் கொண்டே உளுந்து விதைத்து காண்பிக்கப்பட்டது.வட இந்தியாவில் கங்கை சமவெளியில் கடந்த 40 ஆண்டுகளாக நெல் மற்றும் கோதுமை அறுவடைக்குப்பின் இதேபோன்று அறுவடை செய்த நாளிலேயே உள்ள மண்ணின் ஈரப்பதத்தைக் கொண்டு பயறு வகைகள் உள்ளிட்ட பயிர்களை இவ்வகைக்கருவி மூலம் நிலத்தை உழாமல் திறம்பட விதைத்து நல்ல விளைச்சலும் வருவாயும் பெற்று வருகின்றனர்.தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 30 வேளாண் அலுவலர்கள் முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெல் அறுவடைக்குப்பின்னர் பயறு வகைப்பயிர்களை விதைப்பதற்கு இநத கருவியினைப் பயன்படுத்தலாம். இந்த கருவியைக் கொண்டு ஒரு நாளில் 8 ஏக்கர் வரை விதைக்கலாம். இந்த கருவியைக் கொண்டு விதைக்கும் போது ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை போதுமானது என ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் உதவிப்பேராசிரியர் இளமதி ஆகியோர் தெரிவித்தனர். இந்த செயல் விளக்க நிகழ்வில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu