வெகு விமர்சையாக நடைபெற்ற கருட சேவை

கும்பகோணம் அருகே 108 வைணத்தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலம் என்றும் போற்றப்படும் நாச்சியார்கோயில் வஞ்சுவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் இன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு, கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீனிவாசப்பெருமாள், வஞ்சுளவல்லி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். 108 வைணவ தலங்களில் ஒன்றான இதில் மேதாவி மகரிஷியின் பிராத்தனையினை நிறைவேற்ற அவரது மகளாக தோன்றிய மகாலட்சுமியை மானிட உருவத்தில் வந்து ஸ்ரீனிவாசப்பெருமாள் திருகல்யாணம் புரிந்ததும், திருமங்கையாழ்வாரால் நூறு பாசுரங்கள் அருளி மங்களா சாசனம் செய்துள்ள புண்ணிய தலமும் ஆகும்.
இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் மற்றொரு சிறப்பம்சமாக உலகிலேயே வேறு எங்கும் காண முடியாத வகையில், ஒரே கல்லால் ஆன மிக பெரிய கல்கருடன் பகவான் உடல் முழுவதும் நவ சர்ப்பங்கள் தரித்து தனிசன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவது விசேஷமாக கருதப்படுகிறது. மற்ற சுவாமிகளை போல இவருக்கும் நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி என இரு முறை மட்டுமே சன்னதியில் இருந்து வெளி வரும் இந்த கருட பகவானை முதலில் சன்னதியில் இருந்து வெளியே வரும் போது 4 பேரும் தொடர்ந்து 8, 16, என 32 பேர் வரை தூக்குவது வழக்கம் கல்கருடன் மீண்டும் சன்னதிக்கு திரும்பும் போது 32 பேரில் இருந்து 16, 8 என ஆட்கள் எண்ணிக்கை குறைந்து கடைசியாக 4 பேருடன் மீண்டும் சன்னதியை சென்றடைவது வழக்கம்.
இந்த கருட பகவானை தொடர்ந்து 7 வியாழக்கிழமை வழிபடுவதன் மூலம் பிராத்தனை அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். இத்திருக் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விளையாற்றியுடன் பங்குனி பிரம்மோற்சவம் தேர் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளைகோவில் செயல் அலுவலர் மற்றும் பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu