வாடகைக்கு எடுத்து மோசடி 2 பேர் கைது, 28 கார்கள் மீட்பு
சென்னை பெருங்குடி அம்பேத்கார் நகர் கெனால்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்ட ராஜா ( 33). இவர் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான காரை கும்பகோணம் அருகே உள்ள அழகாபுத்தூர் பாதரக்குடியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரிடம் மாத வாடகைக்கு கொடுத்துள்ளார். காரின் வாடகையை மலைச்சாமி சரியாக கொடுத்து வந்ததால் மணிகண்ட ராஜா தன்னுடன் பல்வேறு இடங்களில் பணிபுரியும் நண்பர்களிடம் விவரத்தைக் கூறி உள்ளார்.
அவரது நண்பர்கள் புதிய கார்கள் வாங்கி மாத வாடகைக்கு மலைச்சாமி வசம் ஒப்படைத்துள்ளனர். இதுபோல் மொத்தம் 41 கார்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிகண்ட ராஜா மற்றும் கார் உரிமையாளரான அவரது நண்பர்களுக்கு வாடகை சரியாக வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டராஜா மற்றும் அவரது நண்பர்கள் நாச்சியார்கோவில் போலீசில் புகார் செய்தனர். தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் அதிர்ச்சி அடைந்த நாச்சியார் கோவில் போலீசார் தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் கும்பகோணம் கோதண்டபாணி தெருவைச் சேர்ந்த தர்மராஜன் ( 29). அதே பகுதி காடுவெட்டி தெருவைச் சேர்ந்த கோபிநாத், சாக்கோட்டை விக்னேஷ் ஆகியோரிடம் கார்களை அடமானம் வைத்து மலைச்சாமி பணம் பெற்றுள்ளதும், அடமானம் பெற்ற கார்களை அந்த நபர்கள் உள்வாடகைக்கு வெளி நபர்களிடம் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசாரின் அதிரடி விசாரணையில் கோபிநாத்திடம் 4 கார்கள், தர்மராஜிடம் 10 கார்கள் விக்னேஷிடம் 13 கார்கள், மலைச்சாமியிடம் 14 கார்கள் இருப்பது தெரியவந்தது. மலைச்சாமி, தர்மராஜை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 28 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள கோபிநாத், விக்னேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மற்ற 13 கார்கள் எங்கே உள்ளது. மேலும் இவ்வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu