அறுவடை வரை செல்லுபடியாகும் வகையில் ஒரே சிட்டா அடங்கலை நடைமுறைப்படுத்த வேண்டும்
திருவையாறு தாலுகாவைச் சார்ந்த விவசாயிகள் பயிர்க் கடன் மற்றும் குறுகிய காலக் கடன் பெறுவதற்காக கூட்டுறவு சங்கம் மற்றும் அரசு வங்கிகளில் விண்ணப்பிக்கும் போது சம்மந்தப்பட்டவரின் நிலம் சார்ந்த கிராமத்தின் வி.ஏ.ஓ. விடமிருந்து அந்தப் பருவ மகசூலுக்கான சிட்டா, அடங்கல் சான்று பெற்று அந்த அசல் சான்றினையும் கடன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டி உள்ளது.
ஒரு பருவ மகசூலுக்கு வி.ஏ.ஓ. வினால் வழங்கப் படும் சிட்டா அடங்கல் சான்று, அந்த மகசூல் அறுவடைக் காலம் வரையில் மாற்றம் ஏதுமில்லாமல் செல்லுபடியாகக் கூடியதே. அந்த மகசூல் காலத்திலேயே அந்த விவசாயிகள் பிற நிதி நிறுவனங்களில் கடனுதவி கோரியோ, அரசு நிதியுதவி கோரியோ, அறுவடை செய்த நெல் முதலிய விளைபொருட்களை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யவோ செல்லும் போதும் மீண்டும் வி.ஏ.ஓ. விடம் புதியதாக சிட்டா அடங்கல் பெற்று, இணைத்து விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
இதனால் விவசாயிகள் ஒரு சாகுபடி பருவத்துக்குள் ஒரே சிட்டா அடங்கல் சான்று வாங்குவதற்காக வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு பல தடவை செல்ல வேண்டி இருப்பதோடு, வி.ஏ.ஓ வும் பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையே கிராம விவசாயிகளுக்கு ஒரே சிட்டா அடங்கலை மீண்டும் மீண்டும் எழுதிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கும் வி.ஏ.ஓ. வுக்கும் காலவிரயமும் பணிச் சுமையும் அதிகரிக்கிறது.
எனவே, விவசாயிகளுக்கு வி.ஏ.ஓ. வினால் ஒரு மகசூலுக்கு வழங்கப்படும் சிட்டா அடங்கல் சான்று அந்த மகசூல் அறுவடை வரையில் செல்லுபடியாகக் கூடியது என்பதால் அதனை அசல் பத்திரம், பட்டா ஆகிய சான்றாவணங்களைப் போலவே சிட்டா அடங்கலின் உண்மை நகலையும் கூட்டுறவு சங்கம், வங்கிகள் முதலிய அரசு நிதி நிறுவனங்கள் விவசாயிகளிடம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சேவையாற்றிட முன்வரவேண்டும் என்று திருவையாறு பகுதி விவசாயிகள் கோருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu