கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும்

கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு  வந்த திருச்சென்னம் பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 

கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகா திருச்சென்னம் பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டனர்.

பின்னர் விவசாயிகள் கூறியதாவது: எங்கள் ஊராட்சி எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒரு பெரிய நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிமிடத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீதம் எந்த நேரமும் பெரிய மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர்.

மேலும் 3 முறை மணல் குவாரிகள் அமைத்து பெருமளவில் மணல் எடுத்து ஆறும் 15 அடி பள்ளமாகி விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டதால் 60 அடி முதல் 100 அடி வரை ஆழப்படுத்தி உள்ளோம். நீர்மட்டம் குறைந்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள் காய்ந்துவிட்டன. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடந்த 2020-ம் ஆண்டு வரை மணல் குவாரிகள் அமைக்கவும், கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த 2-வது நீரேற்று நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதை எதிர்த்து நாங்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் மணல் குவாரியும், நீரேற்று நிலையம் அமைக்கும் திட்டமும் கைவிடப்பட்டது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதால் மீண்டும் நீரேற்று நிலையம் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த போர்வெல் அமைத்து வருகின்றனர். இதனால் எங்கள் பகுதியின் வளங்கள் பாதிக்கப்படுவதுடன் குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நீரேற்று நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினர்.

Tags

Next Story