தஞ்சை மாவட்டத்தில் நெல் வயல்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன
தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள்
தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசன பகுதி பாசனத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் சீரான முறையில் பாசனத்துக்கு கிடைத்ததால் பாசன பகுதியில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி வேளாண் துறையால் குறிப்பிடப்பட்ட இலக்கை தாண்டி ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 233 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகள் மழையிலும், பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் விளைவித்த குறுவை நெல்லை மிகுந்த சிரமத்திற்கு இடையே விற்பனை செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 973 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டு உள்ளது. கல்லணையின் தலைப்பு பகுதியில் உள்ள பூதலூர் ஒன்றியத்தில் 26 ஆயிரத்து 892 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூதலூர்பகுதியில் முன் பட்ட சம்பா இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளது.
விவசாயிகள் கதிர் வந்து முற்றிய நிலையில் உள்ள சம்பா நெல் வயல்களை ஈரத்தை காய வைக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர். அதே சமயத்தில் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பூதலூர் ஒன்றிய பகுதியில் எந்த ஒரு முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பூதலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் அறுவடைக்கு சம்பா பயிர்கள் தயாராக இருந்தபோதிலும் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான அறிகுறி காணப்படவில்லை. முன் பட்ட சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களுடன் இணைந்து எங்கெங்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, அந்தப் பகுதியில் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் பணிகளை செய்ய வேண்டும்.மேலும் சாக்கு, சணல் போன்றவற்றை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உடனுக்குடன் பணம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu