டெல்டா மாவட்டங்களில் மத்திய உணவுத்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு

நெல்லின் ஈரப்பதத்தை 20% வரை உயர்த்தவது தொடர்பாக மத்திய உணவுத்துறை அதிகாரிகள் நாளை டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.

நெல்லின் ஈரப்பதத்தை 20% வரை உயர்த்தவது தொடர்பாக, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் நாளை டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17% வரை இருக்க வேண்டும், ஆனால் தற்போது டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனர். இதனால் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாள்தோறும் நெல்லை சாலைகளில் கொட்டி வைத்து காயவைப்பதால், நாள் ஒன்றுக்கு ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே தற்போது மழைகாலம் என்பதால் நெல்லின் ஈரப்பதம் 20% வரை உயர்த்தி பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, 20% ஈரப்பதம் உள்ள நெலை கொள்முதல் செய்ய அனுமதிக்கும்படி தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து தமிழகம் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்நிலையில் மத்திய உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு நெல்லில் உள்ள ஈரப்பதம் தொடர்பாக நாளை டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஆய்வின்போது பல்வேறு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லை சேகரித்து, தமிழகத்தில் உள்ள மத்திய ஆய்வுக் கூடங்களுக்கு எடுத்துச் சென்று ஈரப்பதத்தை கண்டறிவார்கள். பிறகு டில்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதைத் தொடர்நது ஈரப்பதம் அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story