கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிலம்பாட்ட கலையை கற்றுத்தரும் கல்லுாரி மாணவி
கிராமப்புற மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கும் கல்லுாரி மாணவி சினேகா
தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல் காரணமாக தனது வெற்றி பறிக்கப்பட்டதால் தன்னுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தான் கற்ற சிலம்பாட்ட கலையை பயிற்றுவித்து, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள செய்து வெற்றி பெற வைத்து சாதனை படைத்து வருகிறார் கல்லுாரி மாணவி சினேகா.
சிலம்பாட்டம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சினேகா என்ற கல்லூரி மாணவி, அரசுப்பள்ளியில் சிலம்பாட்ட ஆசிரியர் மூலம் பயிற்சி பெற்று கடந்த 9 வருடங்களாக மாவட்ட மற்றும் மாநில அளவில் சிலம்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார். மாநில அளவில் இதுவரை 10 போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்ட சினேகா சிறப்பாக விளையாடியும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. வெளிமாநில விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்கூடாக பார்த்த அவர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார்.
எனினும் அதில் துவண்டு போகாமல் தான் கற்று வரும் சிலம்பாட்ட கலையை தன்னைப் போன்ற ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை வெற்றி பெற வைத்து தன்னுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர்களை வீடு வீடாகச் சென்ற அழைத்துவந்து பயிற்சி அளித்து வருகிறார்.
அதன்படி தான் பயிற்சி அளித்த 20 மாணவர்களை மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள செய்து வெற்றி பெற வைத்து சாதனை படைத்து வருகிறார். மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் அவர்களை கலந்துகொள்ள செய்து தன்னை அரசியல் செய்து எனது வெற்றியை படித்தது போல் இவர்கள் வெற்றியை பறிக்காத வகையில் சிலம்பம் விளையாட்டை உலகறியச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கல்லூரிப் படிப்பை தொடர்ந்துகொண்டு 35க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சியை அளித்து வருகிறார்.
தற்போது சிலம்பம், கத்தி சுற்றுதல், சுருள், வேல்கம்பு போன்று பல்வேறு கலைகளை பயிற்றுவித்து வருகிறார்.இதுகுறித்து சிலம்பாட்ட வீரரான கல்லூரி மாணவியும், பயிற்சியாளருமான சினேகா கூறும்போது.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். சிலம்பம் நமது பாரம்பரிய விளையாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறேன். நான் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்திய பள்ளி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டேன். திறமை இருந்தும் விளையாட்டு துறையிலுள்ள அரசியலால் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
தற்போது என்னுடைய மாணவர்களை தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சி அளித்து வருகிறேன். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள செய்துள்ளேன். இதுவரை மூன்று மாநிலங்களில் நடந்துள்ள சிலம்பப் போட்டியில்எனது மாணவர்களை முதல் பரிசு பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் சென்னை திருவொற்றியிரில் நடைபெற்ற , மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், 32 அணிகள் பங்கேற்றனர். இதில் அனைத்து சுற்றுகளிலும் கலந்து கொண்டு மாநில அளவில் மூன்றாவது இடத்தை எனது அணியினர் பிடித்துள்ளனர். இதற்குஅடுத்து தேசிய அளவிலான போட்டியில் எனது மாணவர்களை கலந்து கொள்ள செய்து நானும் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.
இது தமிழர்களின் பாரம்பரிய கலை, மற்ற கலைகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் நம்முடைய பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்திற்கு சரியான முறையில் தரப்படுவது கிடையாது. இதற்கு சரியான அங்கீகாரம் கொடுத்து விளையாட்டுத்துறையில் அரசியல் இன்றி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும். இதனை தமிழக அரசு ஏற்று இதற்கான உரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu