திட்டை குரு கோயில்: குருபெயர்ச்சியை முன்னிட்டு நடப்பட்ட பந்தல் கால்
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் (குரு பரிகாரத் தலம்) பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெயர்வதை குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. அதன்படி வரும் நவ.13-ம் தேதி குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.இதையடுத்து தஞ்சாவூர் அருகே குரு பரிகாரத் தலம் என போற்றப்படும் வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் மா.தனலெட்சுமி மற்றும் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வசிஷ்டேஸ்வரர், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பந்தகால் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி முகூர்த்தம் செய்து நடப்பட்டது. குரு பெயர்ச்சி நவ.13-ம் தேதி மாலை 6.21 மணிக்கு இடம் பெயர்வதால், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படுவதால், குரு பெயர்ச்சி அன்று பக்தர்களுக்கு தரிசனத்துக்கு மட்டுமே அனுப்படுவார்கள். அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் ஏதும் கிடையாது.
மேலும், குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 15-ம் தேதி ஒரு நாள் மட்டும் லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. அதே போல் நவ.21-ம் தேதி சிறப்பு பரிகார ஹோமம் நடைபெறவுள்ளது. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள் அதற்கான தொகையை கோயில் நிர்வாகத்தில் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான பிரசாதம் தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் மா.தனலட்சுமி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu