அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய ஆந்திரா சிறுமி மீட்பு
போலீஸாரால் மீட்கப்பட்ட தஞ்சை குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேறிய சிறுமி
அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய ஆந்திராவை சேர்ந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டனர்.
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் கடந்த ஜுலை 4-ம் தேதி யாரும் இல்லாமல் தனியாக சுற்றிய தெலுங்கு மொழி பேசும் சிறுமியை காவல்துறையினர் மீட்டனர். அப்போது காவல்துறை விசாரணையில் தனது பெயர் கீதா என்றும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் என்றும் அச்சிறுமி தெரிவித்துள்ளார். தனது தந்தையின் பெயர் ராயுடு என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு வீட்டில் வேலை செய்வதற்காக அவரை அவரது பெற்றோர் விற்றுவிட்டதாகவும், அங்கே வேலை செய்ய பிடிக்காததால் அங்கிருந்து தப்பித்து ரயிலில் ஏறி இங்கே வந்துவிட்டதாகவும் சிறுமி தெரிவித்தார். இதனையடுத்து அச்சிறுமியை தஞ்சாவூரில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கீதா உள்பட 20 சிறுமிகள் சிறுவர் இல்லத்தில் படுத்திருந்தனர். அவர்களுடன் மேட்ரன் (விடுதி செவிலியர்) மாலதி, உதவியாளர் (ஹெல்பர்) சுமதி ஆகியோரும் அதே அறையில் படுத்திருந்தனர். மறுநாள் காலை மேட்ரன் மாலதி கண் விழித்து எழுந்தபோது அங்கே சிறுமி கீதாவை காணவில்லை. அந்த இல்லத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேடியும் சிறுமி கீதாவைக் காணவில்லை.
இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் விஜயா, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கீதா நள்ளிரவு 12.50 மணிக்கு எழுந்து, மாடியின் கீழ்ப் பகுதியில் மாட்டப்பட்டிருந்த சாவியை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றிருப்பதும், அதன் பின்னர் அவர் மாடியிலிருந்து மீண்டும் தரை தளத்திற்கு இறங்கி வரவில்லை என்பதும் தெரிய வந்தது. எனவே அச்சிறுமி மாடியிலிருந்து குதித்து தப்பிப் சென்றிருக்ககூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கண்காணிப்பாளர் விஜயா தஞ்சை தெற்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உத்தரவின்பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய சிறுமியை தேடிவந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே குணமங்கலம் பகுதியில் தெலுங்கு மொழி பேசும் சிறுமி யாரும் இன்றி தனியாக சுற்றி வருவதாக சைல்டு - லைனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சைல்டு - லைன் அமைப்பினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டனர். இவர்தான் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற ஆந்திரா சென்று என்பதை உறுதிசெய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu