வல்லம் அருகே தொடர் வழிப்பறி - இரண்டு பேர் கைது

வல்லம் அருகே தொடர் வழிப்பறி - இரண்டு பேர் கைது
X

வல்லம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

தஞ்சை பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளை வல்லம் போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடியைச் சேர்ந்த கோபால் என்பவர் கடந்த 16.09.2020 அன்று நள்ளிரவு வல்லம் அண்ணா நகரில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அதன் உள்ளே தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் காரின் ஜன்னல் கண்ணாடியைத் தட்டி அவரை எழுப்பியுள்ளனர்.

அவர் தூக்க கலக்கத்தில் ஜன்னல் கண்ணாடியை இறக்கியவுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது புகாரின் பேரில் வல்லம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இக்குற்றச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான வல்லம் பெரியார் நகரைச் சேர்ந்த விஜயன் (25), முன்னையம்பட்டி காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பரமசிவம் (58) ஆகிய இருவரையும் ஆலக்குடி பாலம் அருகே போலீஸார் நேற்று பிற்பகல் மடக்கிப் பிடித்து கைது செய்து செய்தனர்., விசாரணையில் கார் உரிமையாளரிடம் திருடியதை ஒப்புக் கொண்டனர். பின்னர் போலீசார் திருடப்பட்ட நகையை பறிமுதல் செய்தனர்.

விஜயன் தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளி. அவர் மீது தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு செங்கிப்பட்டி அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் காவலாளியை கொன்று அவரிடமிருந்து பணத்தை திருடிச் சென்ற சம்பவத்தில் விஜயன் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags

Next Story