ஹெலிகாப்டர் சகோதரர்களைப்போல் தஞ்சையில் ரூ.700 கோடி நூதன மோசடி

ஹெலிகாப்டர் சகோதரர்களைப்போல் தஞ்சையில் ரூ.700 கோடி நூதன மோசடி
X

ராஹத் பஸ் டிரான்ஸ்போர்ட் அலுவலகம். 

ஹெலிகாப்டர் சகோதரர்களை தொடர்ந்து, பேருந்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.700 கோடி வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட எம்.ஆர்.சுவாமிநாதன் மற்றும் எம்.ஆர்.கணேசன் ஆகியோர் தொழிலில் முதலீடு செய்வதாகக் கூறி 600 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து தஞ்சை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு மோசடி புகார் தஞ்சையில் எழுந்துள்ளது. தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். ராஹத் பஸ் டிரான்ஸ்போர்ட் என்ற பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தனது நிறுவனத்தில் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் தருவதாக கூறி, மாநிலம் முழுவதும் ஏஜென்ட் மூலம் பலரிடம் சுமார் ஒரு லட்சம் முதல்10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்துள்ளார். ஒரு பேருந்திற்கு 16 பேரை முதலீடு செய்ய வைத்துள்ளார். அதில் வரும் வருமானத்தை பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் ஊதியம், உள்ளிட்ட செலவுகள் போக, மீதி வரும் லாபத் தொகையை சரிபங்காக, 16 பேருக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்துள்ளனர். மேலும் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாப தொகையை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் லாப பணத்தை முறையாக வழங்கியதால், முதலீடு செய்தவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டாக முதலீடு செய்தவர்களுக்கு லாப தொகையை வழங்காமல், கொரோனா ஊரடங்கை காரணம் சமாளித்து வந்துள்ளார். பேருந்துக்காக, வசூல் செய்த பணத்தில் அதனை வாங்காமல், முதலீடு செய்தவர்களின் பணத்தில், பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஹோட்டல்கள், பிரிண்டிங் பிரஸ் எனச் சுமார் 400 கோடிக்கும் மேலாக, சொத்துக்களை வாங்கியுள்ளார். அவர் ஷாநிறுவனத்திற்கு சொந்தமான 136 பேருந்துகளில், 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் கடனில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இச்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்.19ம் தேதி கமாலுதீன் உயிரிழந்தார்.

இதையடுத்து முதலீடு செய்தவர்கள் கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் ஆகியோரிடம், பணத்தை கேட்ட போது, அவர்கள், இதற்கு எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளனர். மேலும் அவரை புதைத்துவிட்டோம், தோண்டி எடுத்து பணத்தை பெற்று கொள்ளும் படி கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தமிழகம் மட்டும் இல்லாமல், அரபு நாடுகளில் உள்ளவர்கள் என சுமார் 12 ஆயிரம் பேர் வரை, 700 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். எனவே, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!