இயற்கை விவசாயத்தின் பெயரில் பொது மக்களிடம் நூதன முறையில் மோசடி

இயற்கை விவசாயத்தின் பெயரில் பொது மக்களிடம் நூதன முறையில் மோசடி

இயற்கை விவசாயம் என்று கூறி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க திரண்டு வந்த பொதுமக்கள்

இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்று ஒரு திரைப்படத்தில், பிரபலமான வசனம் இடம் பெற்றிருக்கும்.. அதேபோல் அதிக லாபம் தருவதாக ஆசையைைத்தூண்டி தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கும்பகோணம் ஹெலிகாப்டர்கள் சகோதரர்கள் மோசடி, ராஹத் டிரான்ஸ்போர்ட் மோசடியை தொடர்ந்து, இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் தருவதாக கூறி பொதுமக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோயில் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், இவர் முன்னாள் விமான படை ஊழியர் என்று கூறப்படுகிறது. இவருடன் இவர் மனைவி ஜெர்லின், ரமேஷ், பிரபாகரன், ராஜசேரன், ஜோதிபாசு, ரதீஸ் ஆகியோர் இயக்குநராக செயல்பட்டு நாகர்கோயில், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் பார்ம் இந்தியா (Form india) என்ற நிறுவனத்தை தொடங்கி, பொதுமக்களிடம் 500 முதல் 10,000 வரை வசூல் செய்து, அதன் மூலம் விளைநிலங்களை வாங்கி, அதில் இயற்கை முறையில் விவசாயம் செய்து அதில் வரும் லாபங்களை பகிர்ந்து அளிக்கப்படும் என விளம்பரம் செய்து, திருச்சி, தஞ்சை, நாகர்கோயில், உள்ளிட்ட் பகுதிகளில் பொதுமக்களிடம் பல கோடி வசூல் செய்துள்ளனர்.

கடந்த 2009 ஆண்டு முதல் வசூல் செய்த பணத்தை, அந்த நிறுவனம் திருப்பி வழங்கவில்லை என கூறி, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தங்கள் பகுதிகளில் பார்ம் இந்தியா அலுவலகத்தை திறந்து, அதில் எங்கள் பகுதியை சேர்ந்த படித்த இளைஞர்களை மேனேஜராக நியமனம் செய்து, எங்களிடம் வசூல் செய்தனர். நாங்களும் தெரிந்தவர்கள் என்பதால், பணம் செலுத்தினோம். ஆனால் நாங்கள் செலுத்திய பணத்தை, காலக்கெடு முடிந்தும் திருப்பி வழங்கவில்லை.

மேலும் விவசாயம் செய்ய விளைநிலங்கள் வாங்குவதாக தான் பணம் வசூல் செய்தனர். ஆனால் அவர்கள் வாங்கிய நிலம் எல்லாம் பொட்டல் காடும், தரிசு நிலமாக உள்ளது. எங்களை திட்டமிட்டே ஏமாற்றி விட்டனர். மேலும் ஒவ்வொரு ஊரிலும் அலுவலகத்தைத் திறந்து, அங்கு பணத்தை வசூல் செய்த பிறகு, காலி செய்து விட்டு, வேறு ஒரு ஊரில் அலுவலகத்தை திறந்து பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர்.

இதில் ஏமாந்தவர்கள் பல பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. எனவே தங்களுக்கு லாபம் எதுவும் வேண்டாம். நாங்கள் முதலீடு செய்த பணத்தை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கோடிகணக்கில் மோசடி செய்துள்ளதாகவும், எனவே காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags

Next Story