ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையிலுள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

தஞ்சை ரயில் நிலையத்தில், செங்கொடியின் திருவுருவப் படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும், மத்திய அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என செங்கொடி பத்தாம் ஆண்டு நினைவு நாளில் பல்வேறு அமைப்பினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்கொடி தீக்குளித்து உயிரிழந்தார். அவரின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்தில், செங்கொடியின் திருவுருவப் படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இந்த நிகழ்வில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இரட்டை ஆயுள் தண்டனை முடிந்தும், நீதி கோட்பாடுகளுக்கு மாறாக இன்னும் சிறையில் இருப்பதாகவும், எனவே, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்யும் வரை அவர்களுக்கு நிபந்தனையற்ற பரோல் வழங்க வேண்டும் என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், முகாமில் உள்ள இலங்கை தமிழர்களின் கட்டமைப்பு வசதிக்காக, தமிழக அரசு 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தனர். இதில் தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன், ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சேவையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu