சமூக நீதிக்கான சரித்திரநாயகர் ஸ்டாலின்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி.
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப். 17 -ஆம் தேதியை, சமூக நீதி நாளாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும், அன்றைய நாளில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவித்திருப்பதும், வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனம். இந்த உறுதிமொழியில் உள்ள வாசகங்கள், ஒவ்வொருவரையும் உயர்த்தும் வகையில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்காக தந்தை பெரியார் தொடர்ந்து பணியாற்றினார் எனக் கூறி, சமூக நீதியைக் காக்கப் பாடுபட்ட பெரியாரின் பிறந்த நாளைச் சமூக நீதி நாளாக அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது பொற்கால ஆட்சியின் உதயமாக இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வரைச் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதால், பொது இடங்களில் கூட்டம் சேரக்கூடாது என ஒன்றிய அரசின் உள்துறைச் செயலர் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசை வேறொரு கட்சி ஆட்சி செய்தாலும், அவர்களது அறிவிப்பைத் தமிழக அரசு மதிக்கிறது. அதனால்தான், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது.ஆனால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குப் புதுச்சேரி அரசு அனுமதி அளித்திருப்பதன் மூலம், ஒன்றிய அரசின் விதிகளை அந்த அரசு மீறியிருப்பது தெரிய வருகிறது. ஒன்றிய அரசில் அவர்களது கட்சியே ஆட்சியில் இருந்தாலும் கூட, ஒன்றிய அரசின் ஆணையைப் புதுச்சேரி அரசு மதிக்கவில்லை என்பது தெரிகிறது என்றார் வீரமணி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu