மோசடி புகார்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு

மோசடி புகார்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு
X

தனியார் நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க திரண்டு வந்தவர்கள்

கடந்த வாரம் இந்த நிறுவனம் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்துமுதலீடு செய்த பணத்தை பெற்று தரவேண்டுமென புகார்

சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தனியார் நிறுவனம் மீது மோசடி புகார் கொடுக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு.

திரைப்படங்களில்தான் , நிதி நிறுவனங்கள் மோசடி செய்தால், பாதிக்கப்பட்ட மக்கள் மோசடி நிறுவனத்தை முற்றுகையிடுவது போல காட்சிகள் இருக்கும். ஆனால், அந்த காட்சிகளை மிஞ்சும் வகையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், ஒரே நிறுவனத்தின் மீது புகார் கொடுக்க திரண்டு வந்து முண்டியடித்ததால் மிகப்பெரிய பரபரப்பு அங்கு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் திணறினர். வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனு அளிக்க வருவார்கள்.

ஆனால் இன்று மாவட்ட மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, கடலூர், பாண்டிச்சேரி, திருப்பூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் மீது மோசடி புகார் மனுவை அளித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானனோர் மனு கொடுக்க திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், கடந்த வாரம் இந்த நிறுவனம் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, நாங்கள் முதலீடு செய்த பணத்தை பெற்று தரவேண்டும், நாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், தாங்கள் முதலீடு செய்த பணத்தில் பேருந்துகளை வாங்காமல் பண்ணை வீடு, பள்ளிக்கூடம் போன்ற சொத்துக்களை வாங்கி குவித்துள்ள தாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் உயிரிழந்த விட்ட நிலையில், நாங்கள் முதலீடு செய்த பணத்தை அவரது குடும்பத்தினர் ஏமாற்ற முயற்சி செய்து வருவாதாகவும் கூறுகின்றனர். மேலும் தங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்ட பேருந்துகளை ரகசியமாக வேறு நிறுவனங்களுக்கு விற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கமாலுதீன் மனைவி ரஹானாபேகம் மற்றும் அவரது மகன்கள் அப்சல் ரஹ்மான், ஷாஹாரிஸ் ஆகியோர் நீதிமன்றத்தின் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். எனவே அவர்கள் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பாஸ்போர்ட்டை முடக்கி, சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story