தஞ்சையில் திமுகவிற்கு தாவும் முன்னாள் அதிமுக எம்பி

திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரனைதனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து பேசி அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன்.
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை அதிமுக எம்பியாக பரசுராமன் பதவி வகித்தார். இவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்.பாலுவை 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் தோற்கடித்த பெருமை பரசுராமனை சேரும்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் ரகுமான் நகரில் வசித்து வரும் இவர், அதிமுகவில் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மற்றும் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் உள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் தமிழக அரசையும் கடந்த 22ந் தேதி பாராட்டி பேசினார். அப்போதே அவர் திமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளிவந்தன. அப்போது இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றும், மக்களாட்சி தத்துவத்தின் படி பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதல்படி அவருடைய கொள்கையை பின்பற்றி மிக சிறப்பாக ஆட்சி செய்கின்ற ஸ்டாலின் அவர்களை வாழ்த்துவதில் கடமைப்பட்டுள்ளேன் என்றும், மேலும் இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியை விட்டுக்கொடுத்து இருக்கிறார்களோ, அவர்கள் மிக சிறப்பாக ஆட்சி செய்வதால் தமிழக மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். தானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசினார்.
இது குறித்து அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை மேலும் 28 தேதி நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்பாட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரனை திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து பேசியுள்ளார். தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அதிமுக எம்பியாக இருந்து தற்போது திமுகவிடம் இணைய இருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu