மதுக்கூர் வட்டார உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
பழவேரிக்காடு தனியார் உர விற்பனை நிலையத்தில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் உர இருப்பு விபரங்களை ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவிக்கையில், காவேரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா டிஏபி பொட்டாஸ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் பிரதி மாதம் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு போதுமான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் தனியார் உர விற்பனையாளர் களிடமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்திடவும் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்வோர், உரம் கடத்தல் அல்லது பதுக்களில் ஈடுபடுவோர் மற்றும் வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கு உரம் விற்பனை செய்தல் ஆகிய சட்டத்துக்கு புறம்பான செயல்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திடும் நோக்கிலும், காவேரி பாசன மாவட்டங்கள் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் வட்டாரங்களில் பணிபுரியும் வேளாண்மை துறை அலுவலர்களைக் கொண்டு சிறப்பு ஆய்வு குழு அமைத்து தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மதுக்கூர் வட்டாரத்திலும் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் பத்து தனியார் உர விற்பனை நிலையங்களிலும் சிறப்பு ஆய்வு வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உள்ளிட்ட குழுவினர் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் குறுவை சாகுபடி தற்போது துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பமின்றி கூடுதல் பொருள்களை வழங்கக் கூடாது. அரசு அனுமதித்த விலைக்கு அதிகமாக விலையில் விற்பது தெரிந்தால் உர விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் விவசாயிகளுக்கு தெரியும் வகையில் உரங்களின் இருப்பு மற்றும் விலையை குறித்து விபரப்பலகை வைப்பதோடு மட்டுமின்றி, தினசரி அதனை பதிவு செய்திடவும் உர விற்பனையாளர்களை கேட்டுக்கொண்டார். மேலும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய செல்பேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உர இருப்பு மற்றும் அனைத்து உரங்களின் அரசு நிர்ணயித்த விலை மற்றும் விதைகள் அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு நிலை அனைத்து துறை திட்டங்களின் மானிய விபரங்கள் முன்னுரிமையில் பதிவு செய்து பெறுவது போன்ற நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் விவசாயிகள் உர விற்பனை நிலையங்கள் குறித்து ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu